தென்கொரியாவில் கத்திக்குத்து சம்பவங்கள்: மக்களிடையே பயம், பதற்றம்

2 mins read
1fd42480-0dec-4576-a4da-e03c74435536
கூடுமானவரை அதிக காவலர்களைத் திரட்டி இத்தகைய குற்றச்செயல்களை நசுக்கும்படி தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் உத்தரவிட்டுள்ளார். - படம்: இபிஏ

சோல்: தென்கொரியத் தலைநகர் சோலின் புறநகர்ப் பகுதியான சியோங்னாமில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் நாட்டில் அச்சமும் பதற்றமும் பரவுவதாக தகவல்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு பற்றி பலரும் கவலை தெரிவித்தனர். கூட்டமான இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்வதாக சிலர் கூறினர்.

சோய் என்ற 23 வயது இளைஞர் வியாழக்கிழமையன்று கைதானார். அவர் அதற்கு முன்னதாக கார் ஒன்றில் வந்து நடைபாதையில் சென்றுகொண்டு இருந்தவர்கள் மீது மோதினார். அதில் ஐவர் காயம் அடைந்தனர்.

அவர், பக்கத்தில் உள்ள பகுதிவாரிக் கடை ஒன்றில் புகுந்து அங்கிருந்த பலரையும் கத்தியால் குத்தினார். பிறகு அவர் சியோங்னாமில் உள்ள சுரங்கப் பாதை அருகே ஓடி அங்கிருந்தவர்களைக் குத்தினார்.

ஒன்பது பேர் பாதிக்கப்பட்டதாகவும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவித்தன

இரண்டு மணி நேரத்தில் அந்த ஆடவர் பிடிபட்டார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது.

டேஜியோன் என்ற பகுதியில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரை ஆடவர் ஒருவர் கத்தியால் குத்தினார்.

இச்சம்பவங்கள் என்ன நோக்கத்திற்காக அரங்கேற்றப்பட்டன என்பதைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோல் நகரில் ஜூலை 21ஆம் தேதி நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் உயிர்பலி ஏற்பட்டது. இத்தகைய குற்றச்செயல்களுக்குக் கடும் தண்டனை தேவை என்று குரல்கள் ஒலித்தன.

கூட்டம் மிகுந்த இடங்களில் இதே போன்ற தாக்குதல்கள் நடத்தப்படும் என்று இணையத்தில் முன்னதாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு இருந்தன.

குறிப்புச் சொற்கள்