பேங்காக்: நாடு கடந்து வாழும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, தாயகம் திரும்பும் திட்டத்தை மீண்டும் ஒத்திவைத்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராணுவத்துக்கு எதிரான கட்சிகள் வெற்றி பெற்றன. இருந்தாலும் ஆட்சியை அமைக்க முடியாமல் அவை திணறி வருகின்றன.
இதனால் பதற்றமான அரசியல் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்டு 10ஆம் தேதி நாடு திரும்பப் போவதாக அறிவித்த தக்சின் தனது கனவுப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
தொலைத் தொடர்புத் துறையின் தொழிலதிபரான தக்சின் 2001ஆம் ஆண்டில் பிரதமரானார். ஆனால் அவரது ஆட்சியை ராணுவம் தூக்கி எறிந்ததால் அரசியல் நோக்கத்துடன் தம் மீது கொண்டு வரப்படும் குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காக நாடு கடந்து வாழ்வதாக தக்சின் அறிவித்திருந்தார். 2008ஆம் ஆண்டிலிருந்து அவர் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் அவரது ஆதரவு பெற்ற பியூ தாய் கட்சி, மூவ் ஃபார்வர்ட் கட்சிக்கு அடுத்ததாக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மூவ் ஃபார்வர்ட் கட்சியின் தலைவரான பிட்டா தகுதி இழக்கச் செய்யப்பட்டதால் பிரதமர் பதவி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இந்த நிலையில் பியூ தாய் கட்சியின் ஸ்ரேத்தா தவிசின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.