தென்கொரியாவில் கத்திக்குத்து: காவல்துறைக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வலுக்கும் கோரிக்கை

2 mins read
b8905763-a716-4cc5-813c-57fa364907bb
மூர்க்கத்தனமாகச் செயல்படும் சந்தேக நபர்களைப் பலவந்தமாகக் கையாள காவல்துறைக்கு அனுமதி வழங்குமாறு பலமுறை கோரிக்கை முன்வைக்கப்பட்டது. - படம்: ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

சோல்: அண்மையில் கத்திக்குத்துச் சம்பவங்களால் ஆட்டம் கண்டுள்ள தென்கொரியா, சந்தேக நபர்களை எதிர்க்கும்போது பலவந்தமாகச் செயல்பட காவல்துறைக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து யோசித்து வருகிறது.

இதுபோன்ற கத்திக்குத்துச் சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நாட்டின் முழுக் காவல்படையும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அதிபர் யூன் சுக் யோல் முன்னதாகக் கூறியிருந்தார்.

எனினும், சந்தேக நபர்களைப் பலவந்தமாகக் கையாளுவதற்கான தேவை களத்தில் எழுந்தாலும்கூட தாங்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் தொடர்பில் ‘பிளைண்ட்’ எனும் வேலையிட இணைய சமூகத்தில் பெயர் குறிப்பிடப்படாத காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு ஒன்றை வெளியிட்டார்.

தொடர் கத்திக்குத்துத் தாக்குதல்களைக் காவல்துறை உறுதியுடனோ வேகமாகவோ கையாளத் தவறிவிட்டதாகக் கூறும் கருத்துகளைக் கேள்விப்பட்டு தம் சகாக்களின் மனஉறுதி குன்றியதாக அந்த அதிகாரி சொன்னார்.

நியாயமான சூழலில்கூட சந்தேக நபர்களைப் பலவந்தமாகக் கையாளுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தம் பதிவில் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

ஆயுதமேந்திய சந்தேக நபர்களைக் கையாண்ட விதத்திற்காக காவல்துறை அதிகாரிகள் இழப்பீடு வழங்கக் கோரி கடந்த காலத்தில் வெளியான தீர்ப்புகளை அவர் சுட்டினார்.

மூர்க்கத்தனமாகச் செயல்படும் சந்தேக நபர்களைப் பலவந்தமாகக் கையாள காவல்துறைக்கு அனுமதி வழங்குமாறு பலமுறை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

“கத்திக்குத்துத் தாக்குதல்களுக்குப் பிறகு இத்தகைய கோரிக்கைகள் நிச்சயமாக அதிகரித்துள்ளன,” என்று சோல் நகர காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையே, கத்திக்குத்துத் தாக்குதல் நிகழும்போது அதைத் திறம்படக் கையாளுவது முக்கியம் என்று தென்கொரிய நிபுணர்கள் ஞாயிற்றுக்கிழமை கருத்துரைத்தனர்.

அத்தகைய ஒரு சம்பவம் நிகழும்போது அதை எப்படி கையாளுவது என்பது பற்றி பொதுமக்கள் முன்னதாகவே தெரிந்து வைத்திருப்பது சிறந்தது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்