பிறப்புச் சான்றிதழில் குளறுபடி: நான்கு ஆண்டுகளாக தடுப்புக்காவலில் இளையர்

2 mins read
102cbe85-66f1-468d-8eb5-1f08f7ca0eb3
செய்தியாளர் சந்திப்பில் முகம்மது தருடி பகாரியுடன் ஆர்.ராமச்சந்திரன் (இடது). - படம்: தி ஸ்டார்

மலேசியாவில் பிறந்து பிறப்புச் சான்றிதழ் வைத்திருந்தபோதிலும் லங்காப் குடிநுழைவு தடுப்புக்காவல் நிலையத்தில் 26 வயது ஆடவர் ஒருவர் வைக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்துவாக பிறந்து தம்முடைய 12வது வயதில் முஸ்லிமாக மாறிய முகம்மது ஃபாரித் அப்துல்லா, அடையாள அட்டையைக் காட்டத் தவறியதைத் தொடர்ந்து 2019 செப்டம்பரில் கைது செய்யப்பட்டார்.

“முகம்மது ஃபாரித்துக்கு 17 வயதாக இருந்தபோது சமய ஆசிரியர் ஒருவரால் எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அடையாள அட்டை ஒன்றுக்குப் பதிய அவர் முயற்சி செய்தார். ஆனால், அவரின் பிறப்புச் சான்றிதழில் அவரின் தாயாரின் அடையாள அட்டை எண் இல்லாததால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது,” என்றார் சமய நிலையம் ஒன்றைச் சேர்ந்த திரு முகம்மது தருடி பகாரி, 68.

முகம்மது ஃபாரித் தடுப்புக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டது குறித்து தனக்கு தகவல் வந்ததாக திரு முகம்மது தருடி கூறினார்.

“அவர் என் சொந்த மகன் இல்லை என்றாலும், என் சொந்த மகனைப் போலவே நான் அவரை நடத்துகிறேன். அவருடைய பெற்றோரைத் தேடத் தொடங்கிய நான், அவர்கள் மணவிலக்கு செய்துகொண்டதை அறிந்தேன்.

“அப்போது அவரின் தந்தை ஆர்.ராமச்சந்திரன் காஜாங் சிறையில் இருந்தார். அவரின் தாயார் கிள்ளானின் வசித்தார்.

“ராமச்சந்திரன் சிறையிலிருந்து விடுதலையாக நாங்கள் சில ஆண்டுகள் காத்திருந்தோம். மகனின் பிறப்புச் சான்றிதழைப் புதுப்பிப்பது தொடர்பில் முன்னாள் மனைவியிடம் எடுத்துரைக்க அவர் உதவினார்,” என்றார் திரு முகம்மது தருடி.

புதுப்பிக்கப்பட்ட ஆவணத்துடன் தடுப்பு நிலையத்துக்குச் சென்ற திரு முகம்மது தருடி, முகம்மது ஃபாரித்தை சிறையிலிருந்து விடுவிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

“அசல் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அதிகாரி கூறினார். ஆனால், புதிய பிறப்புச் சான்றிதழ் அடுத்த மாதம்தான் வழங்கப்படும் என நான் கூறினேன்,” என்று திரு முகம்மது தருடி சொன்னார்.

இந்நிலையில், தம் மகன் விரைவில் விடுதலையாக தாம் விரும்புவதாக ராமச்சந்திரன் கூறினார்.

“நான் கடைசியாக அவரிடம் பேசிய கடந்த மே மாதத்தில்தான். தம் நலனில் எவரும் அக்கறை கொள்ளவில்லை என அவர் கூறினார்,” என்றார் ராமச்சந்திரன்.

குறிப்புச் சொற்கள்