தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போர்ச்சுகல் காட்டுத்தீ: 1,000 பேர் வெளியேற்றம்

2 mins read
a65d1a35-e9b9-4796-9487-34894e49eabf
போர்ச்சுகலின் ஒடமிரா நகரில் காட்டுத்தீ. - படம்: இபிஏ
multi-img1 of 2

ஒடமிரா (போர்ச்சுகல்): போர்ச்சுகலின் தெற்குப் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பல்லாயிரம் ஹெக்டர் அளவிலான நிலம் காட்டுத்தீயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,400 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 800க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

தீ முதலில் அலென்டேஜோ வட்டாரத்தில் உள்ள ஒடமிரா நகரில் மூண்டது. அதற்குப் பிறகு போர்ச்சுகலின் தெற்குப் பகுதியில் இருக்கும் அல்கார்வே பகுதியை நோக்கித் தீ பரவத் தொடங்கியது.

அல்கார்வே, போர்ச்சுகலின் ஆகப் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று.

அதிக வெப்பநிலை, பலத்த காற்று ஆகியவை தீயை அணைக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருந்து வருகின்றன. கிட்டத்தட்ட 6,700 ஹெக்டர் அளவிலான நிலம் அழிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமையன்று சூரியன் மறைவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஒடமிரா நகரம் புகைமூட்டமாகக் காணப்பட்டது. அங்கு வானம் கறுமையாகக் காட்சியளித்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 சிறு கிராமங்கள், சுற்றுப்பயணிகள் தங்கும் நான்கு இடங்கள், ஒரு முகாம் பகுதி ஆகியவற்றிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். பல சாலைகள் மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் போர்ச்சுகல் போன்ற தென் ஐரோப்பிய நாடுகளுக்கு பல சுற்றுப்பயணிகள் செல்வர். இப்படிப்பட்ட சூழலில் பல தென் ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத வெப்பநிலையை இவ்வாண்டு எதிர்நோக்கி வருகின்றன.

அதனைத் தொடர்ந்து சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால் அனல் காற்று அடிக்கடி வீசுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அனல் காற்று முன்பைவிட கூடுதல் வீரியத்துடன் இருப்பதாகவும் வெவ்வேறு காலங்களில் வீசுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்