பெய்ஜிங்: சீனாவில் தலைநகர் பெய்ஜிங்கில் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்னமும் 18 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
பெய்ஜிங்கில் சாதனை அளவுக்கு மழை பெய்ததால் உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. புறநகர்ப் பகுதிகளும் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளும் இன்னமும் மூழ்கிக் கிடக்கின்றன.
வெள்ளம் காரணமாகவும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாலும் பலரும் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட சீனா முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்ற மாதம் 147 பேர் மாண்டுவிட்டதாக அல்லது காணாமல் போய்விட்டதாக வெள்ளிக்கிழமை பெய்ஜிங் தெரிவித்தது.
சீனாவின் வடக்கு, வடகிழக்குப் பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. பல வீடுகள் இடிந்துவிட்டன. விளை நிலங்கள் பாழாகிவிட்டன.
இந்த நிலையில், எல்லாவற்றையும் பழைய நிலைக்குச் சரிசெய்து வரும் குளிர்காலத்திற்குள் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புமாறு செய்ய ஆன அனைத்து முயற்சிகளையும் நிர்வாகம் முடுக்கிவிடும் என்று அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
வெள்ளம் காரணமாக வடக்கு ஹிபெய் மாநிலத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் இருக்கும் நகர்களும் பண்ணைகளும் விளை நிலங்களும் பாழாகிவிட்டன.
சுமார் 1.5 மில்லியன் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள மின்சார இணைப்புகள், தொலைத்தொடர்பு இணைப்புகள் எல்லாவற்றையம் சரி செய்ய முயற்சிகள் முடுக்கிவிடப்படும் என்று அமைச்சரவை அறிவித்து இருப்பதாக அரசாங்கத்தின் பிரத்யேக ஒளிபரப்பு தெரிவித்தது.
சீனாவில் ஜூலை கடைசி வாரத்தில் சாதனை அளவுக்கு மழைபெய்தது. டோக்சுரி என்ற சூறாவளியும் அடித்தது. இதனால் வடக்கிலும் வடகிழக்கிலும் பெருத்த சேதம் ஏற்பட்டது.