பேங்காக்: தாய்லாந்தில் மே 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. ஆனால் அரசாங்கம் அமைவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்த நிலையில், நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவைப் பெற்ற பியூ தாய் கட்சி தன் அணிக்கு மேலும் பலரைக் கொண்டுவர முயன்று வருகிறது.
தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பியூ தாய் (141) கட்சியும் மூன்றாவது இடத்திற்கு வந்த பும்ஜாய்தாய் கட்சியும் (71) சேர்ந்து இந்த வாரத் தொடக்கத்தில் ஓர் அணியை அமைத்தன.
அந்த அணியில் இப்போது ஆறு சிறிய கட்சிகள் சேர்ந்து இருப்பதாக பியூ தாய் கட்சித் தலைவர் சோல்னன், புதன் கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அந்த ஆறு கட்சிகளுக்கும் மன்றத்தில் மொத்தம் 16 இடங்கள் இருக்கின்றன.
இதையும் சேர்த்து இந்தக் கூட்டணியின் பலம் 228 ஆக அதிகரித்து உள்ளது. இருந்தாலும் 500 உறுப்பினர்களைக் கொண்ட மன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்குப் போதிய ஆதரவு இல்லை.
நாடாளுமன்றம் கூடும்போது உறுப்பினர்கள் அடுத்த பிரதமரைத் தேர்ந்து எடுக்க இருக்கிறார்கள். அதை எதிர்பார்த்து பியூ தாய் கட்சி மேலும் ஆதரவைத் திரட்டுகிறது.
“பியூ தாய் கட்சி அரசியல் முட்டுக்கட்டையை அகற்றும் நிலையில் இருக்கிறது. இதர கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“நாடாளுமன்றம் கூடும்போது நிலச்சொத்துத் துறையின் பெரும் புள்ளியாகத் திகழ்கின்ற ஸ்ரீரித்தா தவசின்னை, 60, நாட்டின் பிரதமராகத் தேர்ந்து எடுத்து உறுப்பினர்கள் உதவ வேண்டும்,” என்று பியூ தாய் கட்சித் தலைவர் சோல்னன் வலியுறுத்தினார்.
எந்த அளவுக்கு விரைவாக அரசாங்கம் அமைகிறதோ அந்த அளவுக்கு வேகமாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்று அவர் மேலும் கூறினார்.