பேங்காக்: தாய்லாந்தில் கடந்த மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் வென்ற முன்னேற்றக் கட்சியின் தலைவர் பிட்டா லிம்ஜாரோன்ராட் பிரதமராவதற்கு முன்னெடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, முன்னாள் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரைப் பிரதமர் பதவிக்கு ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பது குறித்த குழப்பத்தில் முன்னேற்றக் கட்சி உள்ளது.
புவெய் தாய் கட்சியால் அமைக்கப்படும் புதியதொரு கூட்டணி, தொழிலதிபர் சிரேத்தா தாவிசினை பிரதமர் பதவிக்கு முன்மொழிய திட்டமிடுகிறது.
இந்நிலையில், தங்களது உத்தி குறித்து முடிவெடுக்க, தங்களின் ஆதரவாளர்களின் மனநிலையை முன்னேற்றக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணித்து வருகின்றனர்.
மே 14 தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் முன்னேற்றக் கட்சி முன்னணி வகித்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியாகும் நிலைக்கு அது தள்ளப்படும் சூழல் ஏற்படக்கூடும்.