இந்தோனீசிய அதிபர் தேர்தல்: பிரபோவோவுக்குப் பேராதரவு

2 mins read
b8352eca-9091-447d-b759-b30d10928aab
தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களே உள்ள நிலையில் தற்காப்பு அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான திரு பிரபோவோவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களே உள்ள நிலையில் தற்காப்பு அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான திரு பிரபோவோவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. 

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ள ஒன்பது கட்சிகளில் பாதிக்கும் அதிகமானவர்கள் திரு பிரபோவோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்தோனீசியத் தேர்தல் சட்டப்படி நாடாளுமன்றத்தில் குறைந்தது 20 விழுக்காடு ஆதரவு இருந்தால் தான் அதிபர், துணை அதிபர் பதவிகளுக்குப் போட்டியிட முடியும். 

இந்நிலையில், வியப்பூட்டும் வகையில் நாட்டின் மிகவும் மூத்த கட்சியான கோல்கர் கட்சியும் இஸ்லாமிய சார்பு தேசிய ஆணைக் கட்சியும் அதிபர் தேர்தலில் பிரபோவோவுக்கு ஆதரவு அளிப்பதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.

பிரபோவோவுக்கு அவரது கட்சியான ஜெரிந்தரா கட்சியும் பிகேபி கட்சியும் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்தன. 

அதன்மூலம் நாடாளுமன்றத்தில் உள்ள வாக்குகளில் 46 விழுக்காடு ஆதரவு பிரபோவோவுக்கு உள்ளது. 

தமக்குப் பேராதரவு கொடுத்தவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளதாகப் பிரபோவோ தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். 

பிரபோவோவை எதிர்த்து இருவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மத்திய ஜாவாவின் ஆளுநர் கஞ்சர் பிரனோவோ, ஜகார்த்தாவின் முன்னாள் ஆளுநர் அனீத் பஸ்வேடான் போட்டியிடுகின்றனர். 

நாடாளுமன்றத்தில் கஞ்சர் பிரனோவோவுக்கு 26 விழுக்காடு ஆதரவும் அனீத் பஸ்வேடானுக்கு 28 விழுக்காடு ஆதரவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

பிரபோவோவுக்கு தற்போதைய அதிபரான ஜோக்கோ விடோடோ பேராதரவாக உள்ளார். இருப்பினும், துணை அதிபர் பதவிக்கு யார் போட்டியிடுகிறார் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

அமைச்சர் பதவியில் உள்ள எரிக் தோகிர், பிகேபி கட்சித் தலைவர் முஹைமின் இஸ்கந்தர், விடோடோவின் மகனும் சோலா ஆளுநருமான ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்கா ஆகியோர் துணை அதிபர் பதவிக்கு முன்னுரைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதிபர், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவோர் அக்டோபர் 19ஆம் தேதி முதல் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவுசெய்ய இறுதிநாள் நவம்பர் 25ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில் களமிறங்குவோர் பிப்ரவரி 14ஆம் தேதி வரை பிரசாரத்தில் ஈடுபடலாம்.

குறிப்புச் சொற்கள்