கோலாலம்பூர்: சிட்னி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட இடத்துக்கே திரும்ப நேரிட்டது.
அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதே இதற்குக் காரணம்.
இச்சம்பவம் குறித்து மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உள்ளூர் அதிகாரிகள் நிலவரத்தை ஆராய்வதாகத் தெரிவித்தது.
“பாதுகாப்புக் காரணங்களுக்காக புறப்பட்ட இடமான சிட்னிக்குத் திரும்ப முடிவெடுக்கப்பட்டது. அந்த விமானத்தில் 194 பயணிகளும் ஐந்து விமானச் சிப்பந்திகளும் இருந்தனர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.47 மணிக்கு அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
“எங்கள் பணியாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு மலேசிய ஏர்லைன்ஸ் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது,” என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, சிட்னியிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்த எம்எச்122 விமானம் அவசரகால நிகழ்வு காரணமாக சிட்னிக்குத் திருப்பிவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
பிற்பகல் 1.40 மணிக்கு சிட்னி விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தில் பயணிகளை நோக்கி கத்தத் தொடங்கிய ஆடவர் ஒருவரை அமைதிப்படுத்த விமானச் சிப்பந்திகள் முயற்சி செய்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சிட்னி விமான நிலையத்தில் அவசரகால நிகழ்வுக்கு தாங்கள் விரைந்து செயல்படுவதாக ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்தது.
“உரிய நேரத்தில் இதுகுறித்த மேல்விவரம் அளிக்கப்படும்,” என்று அது கூறியது.