யெலோனைஃப் (கனடா): கனடாவின் நார்த்-வெஸ்ட் டெரிட்டரீஸ் மாநிலத்தில் மோசமான காட்டுத்தீயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத் தலைநகர் யெலோனைஃப்பிலும் இதர சில பகுதிகளிலும், வீடுகளிலிருந்து வெளியேறுமாறு புதன்கிழமையன்று அரசாங்க அதிகாரிகள் மக்களுக்கு உத்தரவிட்டனர்.
காட்டுத்தீயால் ஹே ரிவர் எனும் நகருக்குப் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் எழுந்தது.
கிரேட் சிலேவ் எனும் ஏரிக்கு அருகே உள்ள ஹே ரிவர் நகரில் சுமார் 3,000 பேர் வாழ்கின்றனர். அங்குள்ள மக்களைப் பேருந்து அல்லது விமானத்தில் வெளியேற்றும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக இறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
“நகரின் தெற்குப் பகுதியில் காட்டுத்தீ மோசமடைந்ததைக் கவனித்த ஹே ரிவர் வாசிகள், தீ நகரை நெருங்குவதையும் கண்டனர்,” என்று தீ தொடர்பான தகவல்களை வெளியிடும் அதிகாரி மைக் வெஸ்ட்விக் புதன்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“அப்பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிவதையும் அது வேகமாகப் பரவுவதையும் நாங்கள் கண்டோம்,” என்று அவர் கூறினார்.
மழை பெய்யாவிட்டால் இவ்வார இறுதிக்குள் காட்டுத்தீ யெலோனைஃப் நகருக்குப் பரவக்கூடும் என்று திரு வெஸ்ட்விக் குறிப்பிட்டார். அந்நகரவாசிகள் கட்டங்கட்டமாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். காட்டுத்தீயால் ஆக அதிக அபாயத்தை எதிர்கொள்வோர் முதலில் வெளியேற்றப்படுவதாக திரு வெஸ்ட்விக் குறிப்பிட்டார்.
இந்த காட்டுத்தீயால் இதுவரை பல கட்டடப் பகுதிகள் சேதமடைந்துவிட்டன. உயிரிழப்பு குறித்துத் தகவல் இல்லை.
கனடா, வரலாறு காணாத அளவில் மோசமான காட்டுத்தீச் சம்பவங்களை எதிர்நோக்கி வருகிறது. நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் 230 இடங்கள் நார்த்-வெஸ்ட் டெரிட்டரீஸ் மாநிலத்தில் உள்ளன.

