பிரிக்ஸ் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார் ஸி ஜின்பிங்

பிரிக்ஸ் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார் ஸி ஜின்பிங்

1 mins read
b06a23ab-2e49-4674-a076-b6ab2bdc9ff6
சீன அதிபர் ஸி ஜின்பிங், சீன-ஆப்பிரிக்க தலைவர்கள் கலந்துரையாடலை தென் ஆப்பிரிக்க அதிபருடன் இணைந்து ஏற்றுநடத்துவார். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: தென்னாப்பிரிக்காவில் ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24 வரை நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் தலைவர்கள் கூட்டத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங் கலந்துகொள்ளப்போவதாக சீன வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதியிலிருந்து ஜொஹனஸ்பர்க்கில் சந்திப்பார்கள். உலக விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக எவ்வாறு புவியியல் ரீதியாக நாடுகள் ஒன்றுசேரலாம் என்பது குறித்து கலந்தாலோசிக்கப்படும்.

உக்ரேனில் போர்க் குற்றங்களின் தொடர்பில் அனைத்துலகக் கைதாணையை எதிர்நோக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் காணொளி வழி கூட்டத்தில் கலந்துகொள்வார்.

அமெரிக்காவுடன் போராடிவரும் சீனா, அதன் புவியியல் செல்வாக்கை விரிவுபடுத்த எண்ணுகிறது. ஒரே மாதிரியான எண்ணங்களைக் கொண்ட நாடுகள் பிரிக்ஸ் குடும்பத்தில் சேர்வதை வரவேற்பதாக அது கூறியது.

பிரிக்ஸ் கூட்டத்தில் கலந்துகொள்வதோடு திரு ஸி, சீன-ஆப்பிரிக்க தலைவர்கள் கலந்துரையாடலை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசாவுடன் இணைந்து நடத்துவார் என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்