லண்டன்: பிரிட்டனில் ஏழு குழந்தைகள் வரை கொன்ற ஒரு தாதியைப் பிடிக்க உதவிய தகவல்களை வழங்கியவர்களில் ஓர் இந்திய வம்சாவளிக் குழந்தை மருத்துவரும் அடங்குவார்.
லூசி லெட்பி எனும் தாதி குழந்தைகளைக் கொன்றது நிரூபிக்கப்பட்டது. இச்சம்பவம் பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரிட்டனின் செஸ்டர் நகரில் உள்ள கவுண்டஸ் ஆஃப் செஸ்டர் எனும் மருத்துவமனையில் லெட்பியுடன் டாக்டர் ரவி ஜெயராம் என்பவர் வேலை பார்த்திருக்கிறார்.
லெட்பியைப் பற்றிய சில ஐயங்களைத் தான் முன்னதாகவே தெரியப்படுத்தியதாகவும் அவை கருத்தில்கொள்ளப்பட்டு தக்க நேரத்தில் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் சில உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் டாக்டர் ஜெயராம் வருத்தம் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 33 வயது லெட்பி குழந்தைகளைக் கொலை செய்தது மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. மேலும் ஆறு குழந்தைகளைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அவர்மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன.
முன்பு ஒரு சமயம் குழந்தையின் பிராணவாயுவின் அளவு குறைந்தபோது லெட்பி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்ததாக டாக்டர் ஜெயராம் குறிப்பிட்டார். அதைக் கண்டு தான் நிம்மதியில்லாமல் போனதாக அவர் சொன்னார் என்று டெய்லி மெய்ல் நாளிதழ் தெரிவித்தது.
“அந்தக் (மாண்ட) குழந்தைகளில் நான்கு அல்லது ஐவர் உயிரோடிருந்தால் இப்போது அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருப்பர் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன்,” என்று ஐடிவி நியூஸ் தொலைக்காட்சியின் நேர்காணலில் டாக்டர் ஜெயராம் கூறினார். லெட்பியின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பிறகு அந்த நேர்காணல் நடைபெற்றது.
2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்று குழந்தைகள் இறந்தன. அப்போதே சில மருத்துவர்கள் ஐயங்களை எழுப்பியதாக டாக்டர் ஜெயராம் தெரிவித்தார்.
கூடுதலான குழந்தைகள் மயங்கி மரணமடைந்த பிறகு தன்னைப் போன்ற மூத்த மருத்துவ நிபுணர்கள் மருத்துவமனை அதிகாரிகளுடன் பல சந்திப்புகளை நடத்தி லெட்பியைப் பற்றித் தங்களுக்கிருந்த ஐயங்களைத் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவை (என்ஹெச்எஸ்) அறநிதி, காவல்துறை அதிகாரி ஒருவரைச் சந்திக்க மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
லெட்பியின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட அதே மான்செஸ்டர் நீதிமன்றத்திலேயே திங்கட்கிழமையன்று அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.

