பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத், ஆகஸ்ட் 22ஆம் தேதி தாயகம் திரும்புவார் என்று அவரது மகள் கூறியிருக்கிறார்.
அதேநாளில் தாய்லாந்தின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது.
பெருஞ்செல்வந்தரான 74 வயது தக்சின், தாய்லாந்தில் 2006ஆம் ஆண்டு நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அதன் பிறகு, ஏறத்தாழ 15 ஆண்டுகள் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வருகிறார்.
தாம் தாயகம் திரும்ப விரும்புவதாக வெகு நாள்களாக அவர் கூறிவந்தாலும் திரு தக்சின்மீது பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்கிறார் அவர்.
இந்நிலையில், “செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 9 மணிக்கு என் தந்தையை டோன் முவாங் விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்வேன்,” என்று திரு தக்சினின் மகள் பேயெடோங்டான் ஷினவாத் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

