பெய்ஜிங்: சீனத் தற்காப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபு ரஷ்யாவுக்கும் பெலருசுக்கும் ஒரு வாரப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் சீனா திரும்பியுள்ளார்.
ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் நெருக்குதல் அளித்துவரும் வேளையில் அந்த நெருக்குதலுக்கு அடிபணியப் போவதில்லை என்பதை இந்தப் பயணம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவத் தொடர்பின் வரம்புகளைக் காட்ட இந்தப் பயணத்தை திரு லீ பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகிற்கு மாற்று பாதுகாப்புத் திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார். இது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டணி என்று கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு உச்சநிலை மாநாட்டில் சந்தித்துப் பேசியபோது திரு லீ ரஷ்யா, பெலnருஸ் பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்க இருப்பதாகவும் இதுதொடர்பாக புதிய அத்தியாசத்தில் நுழைந்திருப்பதாகவும் மாநாட்டின்போது அதிபர் பைடன் கூறினார்.


