பிரதமர் லீ சியன் லூங், தாய்லாந்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஸ்ரேத்தா தவிசினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பியூ தாய் கட்சியைச் சேர்ந்த 61 வயது தவிசின் புதன்கிழமை தாய்லாந்து மன்னரின் ஒப்புதலுடன் அந்நாட்டுப் பிரதமராகப் பதவியேற்றார்.
அவருக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில், சிங்கப்பூரும் தாய்லாந்தும் பன்முக உறவுகள், வலுவான பொருளியல் உறவுகள், அரசியல் உறவுகள், மக்களுக்கிடையிலான உறவுகள் என அனைத்து நிலைகளிலும் நல்லுறவைப் பேணி வருவதாகத் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகம், முதலீடு, தற்காப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகால, ஆழமான ஒத்துழைப்பு நிலவுகிறது. ஆசியான் உட்பட பன்னாட்டு அமைப்புகளில் சிங்கப்பூரும் தாய்லாந்தும் வலுவான பங்காளிகளாக விளங்குகின்றன,” என்று பிரதமர் லீ கூறியுள்ளார்.
வரும் ஆண்டுகளிலும் இருதரப்பு நட்பு தொடர்ந்து வலுப்பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில், தாய்லாந்தின் புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசினும் அவரது துணைவியார் டாக்டர் பக்பிலாய் தவிசினும் சிங்கப்பூருக்கு வருகையளிக்க வேண்டும் என்று பிரதமர் லீ அழைப்பு விடுத்துள்ளார்.
திரு தவிசின் விரைவில் தாய்லாந்தின் புதிய அமைச்சரவை குறித்த தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

