பெய்ஜிங்: சீனா தனது கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகளை 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென தளர்த்தியது.
இதனால், அந்நாட்டில் டிசம்பர் - ஜனவரி காலகட்டத்தில் சராசரியாக பதிவாகும் மரண நிகழ்வுகளைக் காட்டிலும் கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் கூடுதலாக மாண்டதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சியாட்டல் நகரில் உள்ள ஃபிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் நிலையம் இந்த ஆய்வை நடத்தியது.
சில சீனப் பல்கலைக்கழகங்களின் தரவுகளையும் இணையத்தில் உள்ள தரவுகளைக் கொண்டும் ஆய்வு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2022 டிசம்பர், 2023 ஜனவரி என இரு மாதங்களில் மட்டும் கூடுதலாக 1.87 மில்லியன் பேர் மாண்டனர் என்றும் அவர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் ஆய்வு முடிவு குறிப்பிட்டது.
அமெரிக்காவின் ஆய்வுத் தகவல் குறித்து சீனா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, இறப்பு போன்றவை தொடர்பில் சீனா கூடுதல் தரவுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அதனால் மற்ற நாடுகள் கூடுதல் விழிப்புடன் இருக்க முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

