தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடலில் அணுஆலை நீர்: சீனாவில் இருந்து தொலைபேசி தொல்லை என ஜப்பான் புகார்

2 mins read
57120d9c-55b5-4f90-8b5f-404bb527a435
ஜப்பான் கெட்டுப்போய்விட்ட ஃபுகுஷிமா அணுசக்தி ஆலையில் இருந்து கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்துவிட தொடங்கி உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ் 

தோக்கியோ: ஜப்பான், கெட்டுப்போய்விட்ட ஃபுகுஷிமா அணுசக்தி ஆலையின் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்துவிட தொடங்கி உள்ளது. ஆலையில் இருந்த உலைகளைக் குளுமைப்படுத்த அந்த கழிவுநீர் பயன்படுத்தப்பட்டது.

அந்த ஆலை அருகே கடல்நீரைப் பரிசோதித்துப் பார்த்ததாகவும் கடல்நீரில் கதிரியக்க அறிகுறி எதுவும் இல்லை என்பது தெரியவந்ததாகவும் அந்த நாட்டின் சுற்றுப்புற அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஜப்பான் வியாழக்கிழமை முதல் ஃபுகுஷிமா அணுசக்தி ஆலையில் இருந்து கழிவுநீரை கடலில் திறந்துவிடத் தொடங்கியது.

அதனை ஆட்சேபித்து ஜப்பான் மக்களும் பக்கத்து நாடுகளின் மக்களும் ஆர்ப்பாட்டங்களில் குதித்தனர்.

ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் கடல்வாழ் உயிரினங்களுக்குச் சீனா தடைவிதித்துவிட்டது.

அந்த ஆலைக்கு அருகே கடல் பகுதியில் 11 இடங்களில் கடல்நீரை ஜப்பான் பரிசோதித்துப் பார்த்தது.

டிரிடியம் என்ற கதிரியக்க வேதிப்பொருளின் அளவு வரம்புக்கும் குறைவாகவே இருந்தது என்று சுற்றுப்புற அமைச்சு தெரிவித்தது. அந்தப் பகுதி கடல்நீரால் மனிதர்களுக்கும் சுற்றுப்புறத்திற்கும் எந்தவித பாதிப்பும் இராது என்றும் அமைச்சு கூறியது.

ஜப்பான் அடுத்த மூன்று மாதங்களுக்கு வாராவாரம் பரிசோதனைகளை நடத்தி முடிவுகளை வெளியிடும்.

அடுத்த கட்டமாக எப்போது கழிவுநீரைக் கடலில் திறந்துவிடலாம் என்பது பற்றி அரசாங்கம் பிறகு முடிவு செய்யும் என்று அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதனிடையே, கழிவு நீரை கடலில் ஜப்பான் திறந்துவிட்டு இருப்பதன் தொடர்பில் ஜப்பானில் செயல்படும் நிறுவனங்களுக்கு அலை அலையாக தொலை பேசி மூலம் சீனா தொல்லை கொடுப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், சீனாவில் வசிக்கும் ஜப்பானியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி தோக்கியோ சீனாவை வலியுறுத்தியது.

அணுசக்தி ஆலையில் பயன்படுத்தப்பட்ட கழிவுநீரை கடலில் திறந்துவிடுவதால் சுற்றுச்சூழலுக்கோ மனித இனத்திற்கோ ஆபத்து எதுவும் இல்லை என்று ஜப்பான் திரும்பத்திரும்ப வலியுறுத்தி வருகிறது.

அதை ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும் ஆதரித்து உள்ளது.

ஆனாலும் ஜப்பானின் அந்தச் செயலை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் கடல்வாழ் உயிரினங்களுக்குச் சீனா தடை விதித்து உள்ளது.

ஜப்பான் கழிவு நீரை வியாழக்கிழமை கடலில் திறந்துவிட தொடங்கியது முதலே ஜப்பானில் செயல்படும் நிறுவனங்களுக்குச் சீனாவில் இருந்து இடைவிடாமல் தொலைபேசி மூலம் தொல்லை கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அலை அலையாக தொலைபேசி மூலம் அலைக்கழிப்பு இடம்பெறுவதால் தாங்கள் வழக்கமாக செயல்பட முடியவில்லை என்று ஜப்பானிய நிறுவனங்களும் அமைப்புகளும் கவலை தெரிவித்தன.

சீனாவில் செயல்படும் ஜப்பானிய நிறுவனங்களும் இதேபோன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் ஜப்பானின் மூத்த அரசதந்திரி இரோயூக்கி நமாசு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்