வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்பிற்கு கடந்த சில நாள்களாக நன்கொடைகள் குவிந்து வருகின்றன.
கடந்த மூன்று வாரத்தில் மட்டும் அவருக்கு கிட்டத்தட்ட 27 மில்லியன் வெள்ளி நன்கொடையாகக் கிடைத்துள்ளது.
தேர்தல் மோசடி தொடர்பாகத் தன்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த 24ஆம் தேதி அட்லாண்டாவின் ‘ஃபுல்டன் கவுன்டி’ சிறைச்சாலையில் சரணடைந்தார்.
பின்னர் 200,000 அமெரிக்க டாலர் (S$271,460) பிணைத்தொகையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் மட்டும் அவருக்கு 9 மில்லியன் வெள்ளிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது.
குறிப்பாக வெள்ளிக்கிழமை மட்டும் திரு டிரம்பிற்கு 5 மில்லியன் வெள்ளிக்கு மேல் நன்கொடையாக வந்ததாக டிரம்ப் தரப்பினர் தெரிவித்தனர்.
சிறையில் அவரது அடையாளங்களைக் குறித்துக்கொண்ட காவல்துறை, ஆவணப் பதிவிற்காக அவரைப் புகைப்படமும் எடுத்தது. அப்படம் பின்னர் வெளியிடப்பட்டது.
அந்தப்படம் பொறிக்கப்பட்ட சட்டைகள், கண்ணாடிகள், குவளைகள், பொம்மைகள் அதிக அளவில் விற்றுவருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப் மீண்டும் 2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முழுவீச்சுடன் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

