பெய்ஜிங்: காதலிக்குப் பத்து நிமிடங்களாக முத்தம் கொடுத்ததால் ஆடவரின் செவிப்பறை வெடித்து, காதுக்குள் ஓட்டை விழுந்தது.
ஆகஸ்ட் 22 - சீனாவில் அன்பர் தினம். அன்றைய நாள், கிழக்கு மாநிலமான ஸிஜியாங்கில் உள்ள மேற்கு ஏரிக்கு அருகில் ஆடவர் ஒருவர், தன் காதலியை உணர்ச்சிமேலிட அணைத்து, முத்தம் கொடுத்தார்.
அப்போது, அவரின் இடது காதுக்குள் ‘கொடகொட’வென்று சத்தம் கேட்டதுடன், காதில் ஊசி குத்துவது போன்று வலியும் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல வலி அதிகரித்ததோடு, அவரின் செவித்திறனும் குறைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு விரைந்தார்.
‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனைக்குப்பின், அவரது காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புறப் பகுதியை பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் ஓட்டை ஏற்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
ஆடவர் முழுமையாக நலம்பெற இரு மாதங்களாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
உணர்ச்சிமேலிட்டு கட்டியணைக்கும்போது காதுக்குள் காற்றழுத்த மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் கூடவே, வேகமாக மூச்சுவிட்டதால் சமனின்மை ஏற்பட்டு காதுக்குள் துளை விழுந்துள்ளது என்றும் மருத்துவ அறிக்கை கூறியது.