பேங்காக்: சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வரும் பயணிகளுக்கான விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும், எல்லா நாடுகளிலிருந்து வருவோரும் கூடுதல் காலம் தங்க அனுமதிக்கவும் தாய்லாந்து பரிசீலனை செய்து வருகிறது.
புதிய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் 2024இல் பயணத்துறை வருமானத்தை நூறு பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்த்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறார்.
கொவிட்-19 பரவலுக்குமுன், தாய்லாந்துக்குச் சென்ற சுற்றுப்பயணிகளில் ஆக அதிகமானோர் சீனர்கள். இவர்களுக்கான விசா விண்ணப்பம் விலைகூடியது. இந்தியப் பயணிகள் 15 நாள் விசாவுக்கு 2,000 பாட் (S$77) கட்டுகிறார்கள்.
விசா தேவையில்லாத நாடுகளின் பட்டியலை விரிவுபடுத்த விரும்புவதாகவும் பெரும்பாலான அனைத்துலகப் பயணிகள் தங்கக்கூடிய காலத்தை உயர்த்த விரும்புவதாகவும் திரு ஸ்ரேத்தா கூறியுள்ளார். இதன் தொடர்பில் தாய்லாந்து விமான நிலைய, விமானச்சேவை நிறுவன நிர்வாகிகளுடன் திங்கட்கிழமை அவர் கலந்து பேசினார்.
இவ்வாண்டு நான்காம் காலாண்டுக்குள் அதிகமான வெளிநாட்டவர்களை ஈர்ப்பது உடனடியான இலக்கு. இதற்காக, விமானப்பயணக் கொள்ளளவை 20 விழுக்காடு உயர்த்த விமான நிலைய நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக திரு ஸ்ரேத்தா சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வரும் பயணிகளுக்கு விசா விலக்கு அளிப்பதற்குப்பதில் விண்ணப்பக் கட்டணத்தை நீக்குவதே சாதகமாக இருக்கும் என்று புக்கிட் பயணத்துறை சங்கத் தலைவர் திரு தனித் தண்டிபிரியாகிஜ் பரிந்துரைக்கிறார்.
கொவிட்-19 பரவலுக்குப் பிறகு சுற்றுப்பயணிகளின் வருகை கிட்டத்தட்ட 70 விழுக்காடு வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டது. ஆனால், சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை முன்பிருந்த அளவுக்கு இன்னும் மீளவில்லை என்று அவர் கூறினார்.
மே மாதம் அறிமுகமான மின்விசா விதிமுறைகள் இதற்கு ஓர் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.