தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதல் மோசடி: இந்தோனீசியாவில் 88 சீனர்கள் கைது

2 mins read
1d728370-7ec1-465e-b101-f55ab52c6b2c
பாத்தாமின் காரா தொழிற்பூங்காவில் இந்தோனீசியக் காவல்துறையிடம் பிடிபட்ட சீன மோசடிக் கும்பல். - படம்: ஏஎஃப்பி

பாத்தாம்: இணையவழிக் காதல் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சீனாவைச் சேர்ந்த 88 பேரை இந்தோனீசியக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

அக்கும்பல் நூற்றுக்கணக்கான சீனர்களைத் தங்கள் வலையில் மோசடி செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சீனர்கள் சிலர் அளித்த ரகசியத் தகவல்களை அடுத்து, பாத்தாமில் உள்ள ஒரு தொழிற்பூங்காவில் 83 ஆண்களையும் ஐந்து பெண்களையும் கைதுசெய்திருப்பதாக இந்தோனீசியக் காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.

நூற்றுக்கணக்கான சீன நாட்டவர்களை அக்கும்பல் மிரட்டினர் என்றும் பாதிக்கப்பட்டவர்களில் பலர் அரசாங்க அதிகாரிகள் என்றும் கூறப்பட்டது.

“இந்தோனீசியர்கள் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரித்து வருகிறோம். ஒருவரும் இல்லை எனில் மோசடிக்காரர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவர்,” என்று காவல்துறைப் பேச்சாளர் ஸவானி பந்த்ரா அர்ஷியாத் கூறினார்.

மோசடிப் பேர்வழிகள் காணொளிவழி தேனொழுகப் பேசி, எதிர்முனையில் இருப்பவர்களைத் தங்களது வலையில் சிக்கவைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. பின்னர், அவர்களைப் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டு, அதனைக் காணொளியாகப் பதிவுசெய்துவிடுவர்.

அதன்பின், பணம் தரவில்லை எனில் சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்டுவிடுவோம் என மிரட்டி, அக்கும்பல் பணம் பறித்ததாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.

அக்கும்பல் எவ்வளவு காலமாக இயங்கி வந்தது, எவ்வளவு பணம் ஈட்டியது என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.

சீனாவில் பல மோசடிக் கும்பல்கள் முடக்கப்பட்டதை அடுத்து, அக்கும்பல்கள் இந்தோனீசியாவிற்கும் மற்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடம்பெயர்ந்ததாக இந்தோனீசியக் காவல்துறை முன்னர் எச்சரித்திருந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டிலும், இணையம் வழியாகப் பலரை ஏமாற்றி, பல மில்லியன் டாலர் பணம் சுருட்டியதாகக் கூறி 85 சீனர்களையும் ஆறு இந்தோனீசியர்களையும் இந்தோனீசியக் காவல்துறை கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்