பேங்காக்: முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவாத் அரச மன்னிப்புப் பெற விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பதவி விலகும் தாய்லாந்து நீதித்துறை அமைச்சர் விசானு க்ரியா-கம் இதைத் தெரிவித்ததாக தாய்லாந்து ஊடகங்கள் குறிப்பிட்டன.
தாய்லாந்தின் ஆகப் பிரபலமான அரசியல்வாதியான திரு தக்சின் 15 ஆண்டுகளாகத் தாமாகவே நாடுகடந்து வாழ்ந்து வந்தார். சென்ற வாரம் தாய்லாந்து திரும்பினார்.
அதற்குப் பிறகு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட எட்டு ஆண்டுச் சிறைத் தண்டனையை அவர் தற்போது நிறைவேற்றி வருகிறார். தாய்லாந்தில் தரையிறங்கியவுடன் திரு தக்சின் தனியார் விமானம் ஒன்றில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதய வலி, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு ஆளானதால் நாடு திரும்பிய முதல் நாள் இரவில் திரு தக்சின் ஒரு காவல்துறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அரச மன்னிப்பு பெற திரு தக்சின் விண்ணப்பம் செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் வின்யாட் சார்ட்மொன்ட்ரி புதன்கிழமையன்று தெரிவித்தார்.

