சோல்: தென்கொரியா, 100 இல்லப் பணிப்பெண்களைத் தருவிப்பதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தென்கொரியாவின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதைச் சரிசெய்து கூடுதலான பெண்கள் மீண்டும் ஊழியரணியில் சேர வகைசெய்ய இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
பிறப்பு விகிதம் குறைவதோடு தென்கொரிய சமூகம் விரைவில் மூப்படைந்து வருகிறது. அதேவேளையில் கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களை தென்கொரியா பொதுவாக அதிகம் ஏற்றுக்கொண்டதில்லை.
மேலும், அந்நாட்டில் பிள்ளைகளை வளர்ப்பதற்கான செலவும் அதிகம். அதனால் வீட்டில் இருந்து குடும்பத்தைக் கவனிக்கவேண்டிய கட்டாயத்தைப் பல தென்கொரியப் பெண்கள் எதிர்நோக்குகின்றனர். குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமலும் சிலர் இருக்கின்றனர்.
இவ்வேளையில் இல்லப் பணிகளை மேற்கொள்வதில் ஈடுபாடு காண்பிக்காத இளம் தென்கொரியர்களின் எண்ணிக்கை சரிந்து வருவதாக அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சு குறிப்பிட்டது.
புதிய வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் திட்டம் இவ்வாண்டு டிசம்பர் மாதமே தொடங்கப்படலாம். இந்நிலையில் இல்லப் பணிப்பெண்களைத் தருவிக்க தென்கொரியா, பிலிப்பீன்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

