பேங்காக்: தாய்லாந்தில் புதிய அமைச்சரவைக்கு அந்நாட்டு மன்னர் மகா வஜ்ரலொங்கொர்ன் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சொத்துச் சந்தைத் தொழிலதிபர் ஸ்ரெத்தா தவிசின் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
திரு ஸ்ரெத்தாவின் ஃபியு தாய் கட்சி, தற்காப்பு, போக்குவரத்து, வர்த்தகம், சுகாதாரம், வெளியுறவு ஆகிய அமைச்சுகளைக் கவனித்துக்கொள்ளும். அக்கட்சிக்கு செல்வந்தர்களான ஷினவாத்ர குடும்பத்தின் ஆதரவு உள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து தாய்லாந்து இடைக்கால அரசாங்கத்தின்கீழ் இயங்கி வந்துள்ளது.
மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூவ் ஃபார்வர்ட் கட்சி வெற்றிபெற்றது. எனினும், பழைமைவாத அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்காததால் அக்கட்சி அடுத்த அரசாங்கத்தை அமைக்க சிரமப்பட்டது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது நிலையில் வந்த ஃபியு தாய், மூவ் ஃபார்வர்டுடனான கூட்டணியிலிருந்து விலகி 2006, 2014ஆம் ஆண்டுகளில் ஷினவாத்ர குடும்பத்துடன் தொடர்புடைய கட்சிகளைக் கவிழ்த்த ராணுவ சார் கட்சிகளுடன் இணைந்துகொண்டது.
தாய்லாந்தின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் திரு ஸ்ரெத்தா வெற்றிபெற்றார்.
திரு ஸ்ரெத்தா, சன்சிரி எனும் சொகுசு சொத்து நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.
நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடந்தபோது தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ர 15 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பினார். தமக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டுச் சிறைத் தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர்க்க அவர் தாமாகவே நாடுகடந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதய வலிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் ஆளானதால் திரு தக்சின் நாடு திரும்பிய முதல் நாளன்று காவல்துறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதற்குப் பிறகு அரச மன்னிப்புப் பெற அவர் விண்ணப்பித்தார்.
விண்ணப்பம் செய்த மறுநாள் திரு தக்சினின் எட்டு ஆண்டுச் சிறைத் தண்டனையை தாய்லாந்து மன்னர் ஓராண்டாகக் குறைத்தார் என்று அறிவிக்கப்பட்டது.

