பேங்காக்: தாய்லாந்தின் புதிய அரசாங்கத்துக்கு அந்நாட்டு மாமன்னர் மகா வஜ்ரலொங்கொர்ன் செவ்வாய்க்கிழமையன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
திரு ஸ்ரெத்தாவின் ஃபியு தாய் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அவருடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
பதவிப் பிரமாணச் சடங்கு தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள அரச மாளிகையில் நடைபெற்றது. பொதுத் தேர்தல் நடைபெற்று கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு தாய்லாந்தின் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகமாக இருக்கும் வாழ்க்கைச் செலவினம், குடும்பங்களில் காணப்படும் கடன் ஆகிய பிரச்சினைகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளைப் புதிய அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட வரலாறு காணாத அளவில் தாய்லாந்துக் குடும்பங்கள் கடன் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன.
செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வில் புதிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் அறிக்கை வெளியிடப்படும்.
அதற்கு மறுநாள் புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சர்கள்நிலைச் சந்திப்பு நடைபெறும். டீசல், மின்சார விலைகளைக் குறைப்பது தொடர்பான முடிவுகள் அந்தச் சந்திப்பில் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.