1,000 கி.மீ. நடந்த தமிழருக்கு நிரந்தரவாசத் தகுதி வழங்கிய நாடு

1,000 கி.மீ. நடந்த தமிழருக்கு நிரந்தரவாசத் தகுதி வழங்கிய நாடு

1 mins read
e912f551-92c5-40c1-baa6-baef91a138c2
நிரந்தரவாசத் தகுதி வழங்க வலியுறுத்தி 1,000 கி.மீ. நடந்த நீல் பரா. - படம்: ஆஸ்திரேலிய ஊடகம்
multi-img1 of 3

சிட்னி: நிரந்தரவாசத் தகுதி வழங்கக் கோரி பேலரட் நகரிலிருந்து சிட்னி நகருக்கு 1,000 கி.மீ. தொலைவு நடந்து சென்ற இலங்கைத் தமிழரின் கோரிக்கைக்கு ஆஸ்திரேலிய அரசு செவிசாய்த்தது.

நீல் பரா என்ற அத்தமிழரும் அவருடைய குடும்பத்தினரும் கடந்த பத்தாண்டுகளாக இணைப்பு விசாவில் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இணைப்பு விசாவில் தங்கியிருக்கும் தம்மைப் போன்ற அகதிகளுக்கு நிரந்தரவாசத் தகுதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சிட்னி நோக்கி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தமது நடைப்பயணத்தைத் தொடங்கினார் திரு பரா.

இந்நிலையில், திரு பரா தமது பயணத்தை முடிக்கவிருந்த நிலையில், அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நிரந்தரவாசத் தகுதி வழங்கப்படுவதாகக் குடிநுழைவு வழக்கறிஞர் கரினா ஃபோர்ட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த திரு பரா, “ஆஸ்திரேலியாவிற்கு நன்றி. இப்போது, ஆஸ்திரேலியா உண்மையிலேயே எனது இல்லமாகிவிட்டது,” என்றார்.

ஆஸ்திரேலியாவிற்குப் பங்காற்றுவோம் என்று உறுதி அளிப்பதாகவும் அவர் சொன்னார்.

பிரதமர் ஆன்டனி அல்பனிஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம், கிட்டத்தட்ட 19,000 அகதிகள் அங்கு தங்கியிருக்க வழிவகை செய்யப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது.

அகதிகளால் ஆஸ்திரேலியாவிற்கு மிகுந்த பங்களிக்க முடியும் எனக் கூறிய திரு பரா, “நாங்கள் வேலைசெய்ய ஆர்வமாக இருக்கிறோம், நடப்பதற்கு அன்று,” என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்