பெய்ஜிங்: சீனத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் லி ஷங்ஃபு, 65, சென்ற வாரம் வியட்னாமியத் தற்காப்புத் தலைவர்களுடன் நடத்தத் திட்டமிட்டிருந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
இரண்டு வாரங்களுக்குமேலாக அவர் பொதுவெளியில் காணப்படவில்லை என்பது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சீன-வியட்னாமிய எல்லையில் செப்டம்பர் 7, 8 தேதிகளில் தற்காப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்திற்கு வியட்னாம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த வருடாந்தரக் கூட்டத்தில் ஜெனரல் லி கலந்துகொள்ளவிருந்தார்.
கூட்டத்திற்கு சில நாள்கள் முன்னதாக அமைச்சர் லிக்கு ‘உடல்நலச் சிக்கல்’ ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் கூட்டத்தை ஒத்திவைக்கும்படியும் பெய்ஜிங், ஹனோயிடம் தெரிவித்தது. வியட்னாமிய அதிகாரிகள் அவ்வாறு கூறினர்.
கூட்டம் திடீரென்று தள்ளிப்போடப்பட்டதையும் சீனா அதற்குக் கூறிய காரணங்களையும் குறித்து ராய்ட்டர்ஸ் முதல்முறையாக செய்தி வெளியிட்டுள்ளது.
சீன அரசாங்கத் தரப்புகள் இதுகுறித்த கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
ஜூலை மாதத்தில் சீனா அதன் வெளியுறவு அமைச்சர் சின் காங்கப் பதவி நீக்கம் செய்தது. அதற்கு முன்னர் சில காலம் அவர் பொதுவெளியில் காணப்படவில்லை. அப்போதும் திரு சின்னுக்கு உடல் நலமில்லை என்றுதான் சீன அதிகாரிகள் கூறினர்.
திரு சின்னைப்போலவே ஜெனரல் லியும் நாட்டின் ஐந்து அரசாங்க ஆலோசகர்களில் ஒருவர். அந்தப் பதவி, வழக்கமான அமைச்சர் பதவியைவிட உயரியது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஜெனரல் லி அவரது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் அமெரிக்கா கருதுகிறது. ஃபைனான்ஷியல் டைம்ஸ் இதுகுறித்துத் தகவல் வெளியிட்டுள்ளது.
சீன ராணுவம், 2017ஆம் அக்டோபரில் நடைபெற்ற ஊழல் குறித்த விசாரணையைக் கடந்த ஜூலையில் தொடங்கியது.
2017 செப்டம்பர் முதல் 2022ஆம் ஆண்டு வரை ஜெனரல் லி அதன் ஆயுதப் பிரிவுக்குத் தலைவராக இருந்தார்.
இருப்பினும் அவர் தவறு இழைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறாரா என்பது குறித்து சீன அரசாங்கம் கருத்துரைக்கவில்லை.

