கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் பிட்டா

1 mins read
b7426c09-e130-4ea0-9a01-548e9d2368d2
தாய்லாந்து பிரதமர் ஆவதற்கு முயன்ற பிட்டா அம்முயற்சி கைகூடாமல் வெள்ளிக்கிழமையன்று தமது ‘மூவ் ஃபார்வர்டு’ கட்சித் தலைவர் பதிவியிலிருந்து விலகினார். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: பிட்டா லிம்ஜாரோன்ராட்டின் ‘மூவ் ஃபார்வர்டு’ கட்சி கடந்த மே மாதம் நடைபெற்ற தாய்லாந்துத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற நிலையில், வெள்ளிக்கிழமையன்று திரு பிட்டா தமது தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

ராணுவ ஆட்சியின் வீழ்ச்சியைப் பார்க்க விரும்பிய வாக்காளர்களின் உணர்வுகளை அறிந்து திரு பிட்டா அவரது கட்சியை முன்னணிக்குக் கொண்டு சென்றார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அவருக்குப் போதிய ஆதரவு கிடைக்காத காரணத்தால் பிரதமராகும் முயற்சி கைகூடவில்லை. அத்துடன், எம்பி தகுதியையும் அவர் இழந்தார்.

“மூவ் ஃபார்வர்டு கட்சித் தலைவராக நான் பதவியைத் துறந்ததற்குக் காரணம், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பக்கூடிய ஓர் எம்பிக்கு, ஓர் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழிவிடுவதற்கே,” என்று திரு பிட்டா தமது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

தற்போதைய விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் ஓர் எம்பியாக இருத்தல் வேண்டும்.

“எனது எம்பி தகுதி இடைநீக்கத்தால், எனக்கு எம்பி பதவியும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வருங்காலத்தில் கிடைக்காது,” என்று பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, கட்சியுடன் அணுக்கமாகத் தாம் தொடர்ந்து ஈடுபடுவேன் என்ற உறுதியையும் திரு பிட்டா அப்பதிவில் அளித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்