விளாடிவொஸ்டோக்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், ரஷ்யாவின் ‘கின்ஸால்’ எனப்படும் அதிவேக ஏவுகணைகளையும் குண்டு வீசும் போர் விமானங்களையும் பார்வையிட்டுள்ளார்.
ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு திரு கிம்மிடம் அவற்றைக் காட்டியதாக இண்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டியூ-160, டியூ-95, டியூ-22எம்3 ஆகிய போர் விமானங்களை திரு கிம் பார்வையிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை அவர், போர் விமானங்களைத் தயாரிக்கும் ரஷ்யத் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தத் தொழிற்சாலைக்கு மேலை நாடுகள் தடை விதித்துள்ளன.
திரு கிம்மின் ரஷ்யப் பயணம் உக்ரேனில் ரஷ்ய ராணுவத்தின் வலிமையை உயர்த்தக்கூடும் என்றும் வடகொரியாவின் ஏவுகணைத் திட்டத்தை வலுப்படுத்தக்கூடும் என்றும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.
புதன்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் வடகொரியத் தலைவர் கிம்மும் நடத்திய சந்திப்பில் ராணுவ விவகாரங்கள், உக்ரேனியப் போர், இரு நாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.
ரஷ்யா விதிமீறலில் ஈடுபடாது என்று செய்தியாளர்களிடம் கூறிய திரு புட்டின், வடகொரியாவுடனான உறவை மேம்படுத்துவதே நோக்கம் என்றார்.
திரு கிம்மின் ரஷ்யப் பயணத்தில் ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்தாகவில்லை என்று ரஷ்ய அதிபரின் பேச்சாளர் குறிப்பிட்டார்.