மோட்டார் வாகனத் துறை ஊழியர்களுக்கு பைடன் ஆதரவு

1 mins read
fc62ead8-7856-48af-9425-7668f8abe846
மிஷிகனில் உள்ள ஃபோர்ட் ஆலைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவில் போராட்டத்தில் இறங்கியுள்ள மோட்டார் வாகனத் துறை ஊழியர்களுக்கு அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஆகப்பெரிய மூன்று கார் நிறுவனங்கள் தாங்கள் ஈட்டியுள்ள லாபத்தை ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

பல்லாண்டு காலமாக ஊழியர்களின் சம்பளமும் அனுகூலங்களும் நியாயமற்ற நிலையில் இருந்து வந்துள்ளதாக திரு பைடன் சொன்னார்.

மோட்டார் வாகனத் துறை ஊழியர் சங்கம் போராட்டத்தில் இறங்கிய சில மணி நேரத்தில் வெள்ளை மாளிகையில் திரு பைடன் வெளியிட்ட கருத்தில், ஊழியர் சங்கங்களுக்கு தமது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று 2020ல் தாம் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதி தெரிவித்தார்.

“பல தலைமுறைகளாக மோட்டார் வாகனத் துறை ஊழியர்கள் அத்துறையை உயிரோட்டத்துடனும் வலுவாகவும் வைத்திருக்க ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளனர். தாங்கள் ஏற்படுத்த உதவிய அனுகூலங்களில் நியாயமான பங்கைப் பெற அவர்களுக்குத் தகுதி உள்ளது,” என்று திரு பைடன் விவரித்தார்.