டெர்னா, லிபியா: கிழக்கு லிபியாவில் அண்மையில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தை அடுத்து, நோய்ப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று நிவாரண உதவிக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இவ்வேளையில், வெள்ளத்தில் காணாமற்போனோரை உயிருடன் மீட்கும் நம்பிக்கை குறைவதாகக் கூறப்படுகிறது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை (செப்.10) ஏற்பட்ட வெள்ளத்தில் துறைமுக நகரான டெர்னா கிட்டத்தட்ட நீரில் மூழ்கியது. வீடுகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.
‘டேனியல்’ புயலைத் தொடர்ந்து இரு அணைகளில் உடைப்பு ஏற்பட்டதே அதற்குக் காரணம்.
மாண்டோர் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏறக்குறைய 3,840 பேர் மாண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
துப்புரவுப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நோய்ப் பரவல், தேவைப்படுவோருக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசேர்ப்பதில் சிரமம் ஆகியவை குறித்து நிவாரண உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
நீரில் பரவும் நோய்கள் குறித்தும் உணவு, உறைவிடம், மருந்துகள் ஆகியவற்றின் பற்றாக்குறை குறித்தும் அவை எச்சரித்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீரின் தரத்தையும் கழிவு வெளியேற்றத் தரநிலை குறித்தும் மதிப்பிடப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
மாண்டோரின் சடலங்களால் சுகாதார அச்சுறுத்தல் ஏற்படும் என்று பரவலாக அஞ்சப்படும் நிலையில், செஞ்சிலுவைச் சங்கமும் உலகச் சுகாதார நிறுவனமும் அவ்வாறு நிகழ்வது அரிது என்று கூறியுள்ளன.

