புலன்விசாரணையில்சீன தற்காப்பு அமைச்சர்

2 mins read
201b529e-c0e9-4ed6-b494-a2b5dda5c00a
சீனத் தற்காப்பு அமைச்சர் லி ஷான்ஃபூ. இவரை சென்ற மாதம் பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. கூட்டங்களிலும் இவர் கலந்துகொள்ளவில்லை. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவின் ராணுவத்தை நவீனமயமாக்கியதில் முக்கிய பங்கு வகித்த ஜெனரல் லி ஷான்ஃபூ இந்த ஆண்டில் தற்காப்பு அமைச்சரானார்.

ஆனால் ஆறே மாதங்களில் அவர் ஊழல் விசாரணைக்கு ஆளாகிவிட்டார். ஜெனரல் லி, சீனாவின் ஆகாய, இணையப் போர் வியூக மேம்பாட்டுக்குத் தலைமை வகித்தவர்.

பிறகு அவர் ராணுவ சாதனக் கொள்முதல் பிரிவுக்குத் தலைமை பொறுப்பை ஏற்றார்.

ஜெனரல் லி, 65, கடந்த மார்ச் மாதம் தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் சென்ற மாதம் அவரைப் பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. கூட்டங்களிலும் அவர் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது. ஜெனரல் லி விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.

ராணுவ சாதனக் கொள்முதல் தொடர்பில் பரந்த அளவிலான புலன்விசாரணை நடந்து வருகிறது.

அதை ஒட்டி ஜெனரல் லியும் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் எந்த கொள்முதல் பற்றி விசாரணை நடக்கிறது என்பதை அது தெரிவிக்கவில்லை.

இது பற்றி கேட்டபோது தனக்கு எதுவுமே தெரியாது என்று சீன வெளியுறவு அமைச்சு பேச்சாளர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறிவிட்டார்.

ஜெனரல் லியின் தற்காப்பு அமைச்சர் பதவி என்பது பெரிதும் அரசதந்திர, சடங்குபூர்வமான ஒரு பதவியாகத் தான் பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் அவர் சீனாவின் ஐந்து அரசாங்க கவுன்சிலர்களில் ஒருவராக இருக்கிறார்.

இந்தப் பதவி, அமைச்சர் பதவியைவிட உயர்வான அமைச்சரவை பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஆக உயரிய தற்காப்பு அமைப்பிற்கு மத்திய ராணுவ ஆணையம் என்று பெயர்.

அதில் ஜெனரல் லிக்கு மற்றவர்களைவிட அதிக முக்கியமான பொறுப்பு உண்டு.

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்ததற்காக 2018ல் ஜெனரல் லிக்கு அமெரிக்கா தடை விதித்தது.

அமெரிக்க நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் நாயகர் திருவாட்டி நான்சி பெலோசி சென்ற ஆண்டில் தைவானுக்குச் சென்றார்.

அதற்குப் பதலடியாக அமெரிக்காவுடன் கூடிய ராணுவப் பேச்சுவார்த்தைகளையும் தகவல் தொடர்புகளையும் சீனா முடக்கிவிட்டது.

அதை பழைய நிலைக்குக் கொண்டு வர அமெரிக்கா முயன்று வரும் ஒரு நிலையில் இந்த நிலவரங்கள் இடம்பெறுகின்றன.

சீனாவுடன் கூடிய உயர்நிலை ராணுவத் தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் ஜெனரல் லிக்கு விதித்துள்ள தடையை அமெரிக்கா அகற்ற வேண்டும் என்று சீன அதிகாரிகள் திரும்பத்திரும்ப கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்