லிபியா வெள்ளம்: உயிரிழப்பு 20,000த்தை தாண்டக்கூடும்

லிபியா வெள்ளம்: உயிரிழப்பு 20,000த்தை தாண்டக்கூடும்

2 mins read
088caa9d-40f1-4e5d-820a-e383a0a0d201
படம்: - ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

திரிபோலி: லிபியாவைப் பாதித்துள்ள வெள்ளத்துக்கு 20,000க்கும் அதிகமானோர் பலியாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், குறைந்தது 10,000 பேரைக் காணவில்லை.

லிபியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கடலோர நகரான டெர்னா கடந்த வாரம் வீசிய கடுமையான சூறாவளியால் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

வெள்ளம் காரணமாக டெர்னா நகரில் சுமார் 40,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கரையோர நகரான அதில் பொதுவாக கிட்டத்தட்ட 100,000 பேர் வசிப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

லிபியா வெள்ளத்தால் இதுவரை குறைந்தது 11,300 பேர் மாண்டதாக சனிக்கிழமையன்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தேடல், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டேனியல் எனும் சூறாவளியால் இரண்டு அணைக்கட்டுகள் உடைந்ததால் இந்நிலை உருவானது. சுமார் 300,000 சிறுவர்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலரா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆளாகலாம் என்ற அச்சம் நிலவுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமையன்று அந்த இரண்டு அணைக்கட்டுகள் உடைந்தன. அதனையடுத்து வெள்ளத்தால் அந்நகரம் இரண்டாகப் பிளந்துபோனது.

வெள்ளத்தால் குடியிருப்புப் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. வெள்ளநீர் கடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் இருந்த அனைத்தும் அழிந்துபோயின.

உடைந்துபோன அணைக்கட்டுகளில் 1998ஆம் ஆண்டிலிருந்து விரிசல்கள் இருந்ததாகத் தகவல்கள் வெளியாயின. அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

1970களில் யூகோஸ்லாவிய நிறுவனம் ஒன்று அணைக்கட்டுகளை உருவாக்கியது. உடைந்த அணைக்கட்டுகளின் குறிக்கோள் நீரைச் சேகரிப்பது அல்ல, வெள்ளத்திலிருந்து நகரைப் பாதுகாப்பதே என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்