நான்னிங் (சீனா): மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 19.84 பில்லியன் ரிங்கிட் (S$5.78 பில்லியன்) மதிப்பிலான மூன்று புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாகியுள்ளன.
கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலைகள் அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பு குறித்து ஆராய்தல், சேமிப்பு மற்றும் தளவாடம், செம்பனை எண்ணெய் வணிக, விநியோக மையம் ஆகியவை தொடர்பில் புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாகின.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்னிலையில் கையெழுத்திடும் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.
இருபதாவது சீனா-ஆசியான் கண்காட்சியிலும் சீனா-ஆசியான் தொழில், முதலீட்டு உச்சநிலை மாநாட்டிலும் பங்கேற்பதற்காக திரு அன்வார் சீனாவின் நான்னிங் நகருக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அவர் சீனத் தொடர்புக் கட்டுமான நிறுவனத்துடனும் ஹுவாவெய் நிறுவனத்துடனும் பேச்சு நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

