பேங்காக்: தாய்லாந்தின் சுற்றுப்பயணத் துறையை மேம்படுத்த அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளை ஈர்க்க எண்ணம் கொண்டுள்ளார்.
சீனா, கஸாக்ஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு விசா நிபந்தனையை விலக்க தாய்லாந்து திட்டமிட்டு வருகிறது. இவ்வேளையில் இந்தியர்களை ஈர்க்கவும் தாய்லாந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
“உள்நாட்டு விவகாரங்களால் இந்தியாவிலிருந்து தாய்லாந்துக்கு அதிகப் பயணிகள் விமானங்கள் வருவதில்லை,” என்று ஊடக மாநாடு ஒன்றில் நடைபெற்ற நேர்காணலில் திரு ஸ்ரெத்தா தெரிவித்தார்.
“இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இவ்வாண்டிறுதிக்குள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள நான் எண்ணம் கொண்டுள்ளேன்,” என்றார் அவர்.
கூடுதலான இந்திய சுற்றுப்பயணிகளை ஈர்க்க மேலும் சில நடவடிக்கைகளை எடுப்பது குறித்து தாய்லாந்து ஆலோசித்து வருகிறது. தாய்லாந்தில் நடைபெறும் இந்தியத் திருமணங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் நகைகளுக்கு வரிக் கழிவு வழங்குவது போன்றவை அவற்றில் அடங்கும் என்று திரு ஸ்ரெத்தா குறிப்பிட்டார்.
திருமணங்கள் போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகளை நடத்த தாய்லாந்து பிரபலமான நாடாக இருந்து வருகிறது.
தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்குப் பொதுவாக எளிதில் விசா கிடைக்கும். அதனால் இந்திய சுற்றுப்பயணிகளுக்கான விசா நிபந்தனையை விலக்க அவசியமிருக்காது என்று திரு ஸ்ரெத்தா சொன்னார்.
சீனா, கஸக்ஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்குத் தற்காலிகமாக விசா நிபந்தனைகளை விலக்க தாய்லாந்து நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு ஒரு வாரத்துக்குப் பிறகு திரு ஸ்ரெத்தா இவ்வாறு கூறியுள்ளார்.
சீன, கஸாக்ஸ்தானிய சுற்றுப்பயணிகள் செப்டம்பர் 25லிருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தாய்லாந்து செல்ல விசா பெறத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அவர்கள் தாய்லாந்துக்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு சுற்றுப்பயணமும் 30 நாள்களைத் தாண்டக்கூடாது.