லண்டன்: இங்கிலாந்தில் ஊதிய உயர்வு கேட்டுப் போராடி வரும் மருத்துவர்கள் இவ்வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருக்கின்றனர். இதுவரை இல்லாத இத்தகைய சம்பவத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் எனத் தேசிய சுகாதாரக் கட்டமைப்பின் (என்எச்எஸ்) அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டன் வரலாற்றில் முதல் முறையாக மூத்த மருத்துவ ஆலோசர்கள், இளம் பயிற்சி மருத்துவர்கள் இன்று போராட்டக் களத்தில் குதிக்கவிருக்கின்றனர்.
இளம் பயிற்சி மருத்துவர்கள் ஏற்கெனவே ஐந்து நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள், மீண்டும் செப்டம்பர் 20 முதல் 22 வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். இதே தேதியில்தான் மூத்த மருத்துவர்களும் வேலை நிறுத்தம் செய்யவிருக்கின்றனர்.
இதையொட்டி ஏறக்குறைய ஒரு மில்லியன் முன்பதிவுகள், சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் சாதனை அளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நோயாளிகள் பாதிக்கப்படுவது குறித்து என்எச்எஸ் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
என்எச்எஸ்ஸின் துணை நிர்வாக அதிகாரியான சாஃப்ரான் கோர்டெரி, இதற்கு முன்பு காணாத வகையில் மூத்த மருத்துவர்களும் இளம் மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் நோயாளிகளுக்கான சிகிச்சையில் இடையூறு ஏற்படும் என்றார்.
பிரிட்டிஷ் மருத்துவர் சங்கம், இளம் மருத்துவர்களுக்கு 35% சம்பள உயர்வு வழங்குவது அவசியம் என்று வலியுறுத்தி வருகிறது. தற்போதைய சம்பளம் 15 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக அது கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே பிரதமர் ரிஷி சுனக்கிற்கு நாளுக்கு நாள் நெருக்குதல் அதிகரித்து வருகிறது.
அவரது அரசாங்கம், வேலை நிறுத்தத்தின்போது மருத்துவர்கள் வேலை செய்வதை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
இதற்காக குறைந்தபட்ச சேவைத் தரத்தை அறிமுகம் செய்ய பிரதமர் ரிஷி சுனக்கின் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
குறிப்பாக அவசர சிகிச்சை, நோயாளிகளுக்கான அவசர பராமரிப்புச் சேவைகள் கட்டாயமாக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

