பெய்ஜிங்: சீனாவின் பல பகுதிகளில் கனமழை, வலுவான காற்று வீசுவது குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கிழக்கு மாநிலமான ஜியாங்சுவில் செவ்வாய்க்கிழமை மோசமான புயல் வீசியதைத் தொடர்ந்து ஐவர் உயிரிழந்தனர்.
புயல் சற்று நேரம் வீசினாலும் அது கடுமையாக இருந்தது. சமூக ஊடகங்களில் வெளிவந்த படங்கள், ஜியாங்சுவிற்கு வடக்கே உள்ள சுச்சியென் நகரில் கார்கள் தலைகீழாகக் கவிழ்ந்து கிடப்பதையும் எங்கும் சிதைவுகள் சிதறிக் கிடப்பதையும் காட்டின.
மாலை 5.20 மணிக்கு வீசிய புயலால் ஏற்பட்ட சேதம் காரணமாக நால்வர் காயமுற்றதாக அரசாங்க ஊடகமான சிசிடிவி தெரிவித்தது. ஏறக்குறைய 1,800 வீடுகள் சேதமுற்றதுடன் பல ஏக்கர பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், தென்மேற்கு சோங்சிங், தென் ஹுனான், கிழக்கு ஆன்ஹுவி, மத்திய ஹுபெய் ஆகிய பகுதிகளுக்கு புதன்கிழமை வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சீனாவின் தென்கிழக்கில் அண்மையில் கனமழை கொட்டித் தீர்த்ததைத் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

