நியூயார்க்: ஐநா சந்திப்பின்போது அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சீனாவுக்கு எதிராகத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
பல நாடுகள் உரிமை கொண்டாடும் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில் உள்ள ராணுவத் தளத்திற்குத் தேவையான பொருள்களை பிலிப்பீன்ஸ் கப்பல்கள் அனுப்பிவைக்கின்றன.
இந்தக் கப்பல்களைச் சீனாவின் கப்பல்கள் தொடர்ந்து கண்காணித்துப் பின்தொடர்வதாக அந்த வெளியுறவு அமைச்சர்கள் சாடினர்.
அண்மையில், ஸ்பிராட்லி தீவுகளில் உள்ள சில பிலிப்பீன்ஸ் ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருள்களை அந்நாட்டுக் கப்பல்கள் அனுப்பின.
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பிஆர்டி சியாரா மட்ரே போர்க்கப்பலை பிலிப்பீன்ஸ் 1999ஆம் ஆண்டில் வேண்டுமென்றே அந்தக் கடற்பகுதியில் நிறுத்திவைத்தது.
அந்தக் கடற்பகுதி தனக்குச் சொந்தமானது என்பதை வலியுறுத்த அது அவ்வாறு செய்துள்ளது.
இந்நிலையில், பிலிப்பீன்ஸ் கப்பல்கள் ராணுவ வீரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ய சென்றபோது சீனக் கடற்படை மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதை அமைச்சர்கள் சுட்டினர்.
அந்தக் கடற்பகுதிகள் தனக்குத்தான் சொந்தம் என்று பிலிப்பீன்சுடனும் ஜப்பானுடனும் சீனா போட்டியிடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சீனாவின் இத்தகைய செயல்கள் சட்டவிரோதமானவை என்று அமைச்சர்கள் மூவரும் குறைகூறினர்.
நியூயார்க்கில் 78வது ஐநா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோக்கோ கமிகாவா, பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் என்ரிக்கே மனாலோ ஆகியோர் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசினர்.
தென்கிழக்காசிய கடற்பகுதியிலும் கிழக்குச் சீனக் கடற்பகுதியிலும் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்டும் கடப்பாடு கொண்டிருப்பதாக மூவரும் உறுதி அளித்தனர்.

