பேங்காக்: திங்கட்கிழமையன்று தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் தரையிறங்கிய சீன சுற்றுப்பயணிகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
தாய்லாந்துப் பொருளியலில் சுற்றுப்பயணத்துறை முக்கிய இடம்பெறுகிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக இத்துறை வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்தின் சுற்றுப்பயணத்துறையை மீண்டும் உயிர்ப்பிக்க தாய்லாந்து தேவையான அனைத்தையும் செய்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக தாய்லாந்துக்குச் செல்ல சீன சுற்றுப்பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இம்மாதம் 25ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தாய்லாந்துக்குச் செல்லும் சீன சுற்றுப்பயணிகள் விசா எடுக்கத் தேவையில்லை.
விசா ஏதும் தேவையில்லாமல் தாய்லாந்து சென்ற முதல் சில சீன சுற்றுப்பயணிகளைத் தாய்லாந்துப் பிரதமர் சிரேட்டா தவிசின் திங்கட்கிழமையன்று சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார்.
சீன சுற்றுப்பயணிகள் பலரும் திரு சிரேட்டாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
விமான நிலையத்தில் சீன சுற்றுப்பயணிகளை வரவேற்கும் விதமாக பாரம்பரிய தாய்லாந்து ஆடைகள் அணிந்த நடனமணிகள் நடனம் ஆடினர். பொம்மலாட்டமும் நடைபெற்றது. இவை சீன சுற்றுப்பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இம்மாதம் 25ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கிட்டத்தட்ட 2.88 மில்லியன் சீன சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்வர் எனத் தாய்லாந்து அரசாங்கம் எதிர்பார்க்கிறது.