பயணங்களைத் தவிர்க்கும் சீன நாட்டினர்

பயணங்களைத் தவிர்க்கும் சீன நாட்டினர்

2 mins read
4591da42-f8d5-4e2d-a9b5-fe785392bf45
பாங்காக் மரகத புத்தர் கோயிலில் சீனச் சுற்றுலாப் பயணிகளும் மற்றவர்களும். - படம்: இபிஏ

ஷாங்காய்: பொருளியல் நிச்சயமற்ற நிலையில், அதிகமான சீனப் பயணிகள் வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளி வைப்பதாக புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

உலகில் ஆக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டிருக்கும் நாடான சீனாவின் இந்த நிலை மற்ற நாடுகளுக்கு கசப்பான செய்தியாக இருக்கும்.

ஆலிவர் வைமனின் ஆலோசனைக் குழுவின் செப்டம்பர் மாதக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 54 விழுக்காட்டினர் 2023ல் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினர். ஜூன் மாதத்தின் 62 விழுக்காட்டுடன் ஒப்பிட இது குறைவாகும். இவர்கள் கொவிட்-19 தொற்றுநோய் பரவலால் சீன எல்லைகளை மூடுவதற்கு முன்னர் அனுபவம் வாய்ந்த சுற்றுப் பயணிகள்.

ஏறக்குறைய 22 விழுக்காட்டினர் அடுத்த மூவாண்டுகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளனர், இது ஜூன் மாதத்தில் வெறும் 6 விழுக்காடாக இருந்தது.

சீனாவில் கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு பயனீட்டு மீட்சியை அதிகரிக்க உதவும் நடுத்தர வர்க்கத்தினர் குறைந்தபட்ச மாத குடும்ப வருமானம் 30,000 யுவான் (S$5,700) வேண்டும் எனக் கூறினர்.

சுற்றுப்பயணம், உணவு உண்பது போன்ற அனுபவமிக்க சேவைகளுக்குச் செலவிடுவது 2023ல் மீண்டு இருந்தாலும் அது நிலையானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய பொருளியல் மந்தநிலை, அரசியல் சூழ்நிலைகளில் வெளிநாடு செல்வதற்கான விருப்பம் குறைந்துள்ளதாக 32 விழுக்காட்டினர் கூறியதாகவும், 19 விழுக்காட்டினர் மட்டுமே அனைத்துலகப் பயணங்களை மேற்கொள்வதில் அதிக விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் உள்நாட்டுப் பயணத்தில் ஆர்வம் வலுவாக உள்ளது. இதற்கிடையில், 35 விழுக்காட்டினர் சீனாவிற்குள் பயணம் செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளனர்.

சீனாவின் பொருளியல் ஆகஸ்ட் மாதத்தில் கோடைகாலப் பயணங்களின் அதிகரிப்பு, பயனீட்டாளர் செலவையும் தொழிற்சாலை உற்பத்தியையும் உயர்த்தியது.

எனினும், வரவிருக்கும் எட்டு நாள் ‘கோல்டன் வீக்’ விடுமுறையானது பெய்ஜிங்கின் பொருளியலை மேம்படுத்துவதற்கான அண்மைய முயற்சிகளில் விளைவுகளை அறிவதற்கு உதவும்.

இந்த வெள்ளிக்கிழமை தொடங்கும் விடுமுறையில் 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணங்களை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு சுற்றுலாத் தலங்கள், தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா போன்ற குறுகிய தூர ஆசிய இடங்கள் மக்களின் அதிக விருப்பமான இடங்களாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்