மலேசிய எழுத்தாளர் சை.பீர் முகம்மது காலமானார்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான சை.பீர் முகம்மது செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) காலையில் காலமானார். அவருக்கு வயது 82.

சிறிது காலமாக உடல்நலம் குன்றியிருந்த அவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் காலமானார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்றன.

அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதமர் அன்வார் இப்ராகிம், பீர் முகம்மதுவின் இலக்கியச் சேவைகளுக்காக அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்திருந்தார்.

1942ல் பிறந்த சை. பீர்முகம்மது மலேசியாவில் நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். ‘ஞானாசிரியன்’ எனும் புனைப்பெயராலும் அறியப்பட்டவர். புனைதைகளுடன் திறனாய்வு, இலக்கியப் பேச்சு, கட்டுரைகள் என இறுதிக் காலம் வரையில் தொடர்ந்து இயங்கி வந்தவர்.

தொண்ணூறுகளுக்குப் பின்னர் மலேசியாவில் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்காற்றிவர்களில் முக்கியமான ஆளுமையாகக் கருதப்படும் பீர் முகம்மது, சிங்கப்பூர் - மலேசிய இலக்கிய உறவுகளை வளர்ப்பதில் 1990களில் துடிப்போடு செயலாற்றியவர். சிங்கப்பூர் எழுத்தாளர் விழா நிகழ்வுகளிலும் மற்ற இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் வரும் அவர், இந்நாட்டு எழுத்தாளர்கள் பலருடன் நல்லுறவை இறுதிவரையிலும் பேணி வந்தார்.

அதேபோல் மலேசிய இலக்கியத்துக்கும் உலகத்தமிழ் இலக்கிய உலகுக்கும் தன்னால் இயன்ற வரையில் பாலமாகச் செயல்பட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்கள் பலரை மலேசியாவுக்கு அழைத்துச் சிறப்புச் செய்திருக்கிறார்.

மற்ற நாட்டுத் தமிழ் எழுத்துகளை மலேசியாவில் அறிமுகப்படுத்தியும், மலேசிய இலக்கியத்தை தமிழகம், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தியும் வந்துள்ள இவர், மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தை கடல் கடந்து அறிமுகம் செய்த முன்னோடி எனக் கருதப்படுகிறார்.

முத்தமிழ் படிப்பகம், மணிமன்றம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற இயக்கங்களில் இணைந்து இலக்கிய வளர்ச்சிக்காக செயல்பட்ட சை.பீர்முகம்மது, தொண்ணூறுகளுக்குப் பின்னர் எந்த இயக்கத்தையும் சாராமல் தனியனாக முயன்று, மலேசிய சிறுகதைகளைத் தொகுத்து ‘வேரும் வாழ்வும்’ என்ற மூன்று பெரும் தொகுப்புகளைப் பதிப்பித்தார்.

தரமான இலக்கியங்களைக் கவனப்படுத்த ‘முகில்’ எனும் பதிப்பகத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி பல நூல்களைப் பதிப்பித்துக் கவனப்படுத்தியுள்ளார். பல எழுத்தாளர்கள் நூல் வெளியிடத் துணை நின்றுள்ளார்.

‘வெண்மணல் பயாஸ்கோப்காரனும்’, ‘வான்கோழிகளும் ‘சந்ததிகளும்’ சிறுகதைத் தொகுப்புகள், ரப்பர் உறைகளும்’ கவிதை நூல், நான்கு கட்டுரை நூல்கள், பெண் குதிரை, அக்கினி வளையங்கள் ஆகிய இரு நாவல்களை சை.பீர் முகம்மது எழுதியுள்ளார்.

மலேசியாவில் இவரது நூல்களுக்கு மாணிக்க வாசகம் விருது இருமுறை கிடைத்துள்ளது, ‘பெண் குதிரை’ என்ற இவரது நாவல் இந்தியில் மொழிப்பெயர்க்கப்பட்டதுடன் நாமக்கல் சின்னப்பபாரதி அறக்கட்டளையின் விருதையும் பெற்றுள்ளது. இவரது சில சிறுகதைகள் மலாய், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2019ல் வெளிவந்த இவரது ‘அக்கினி வளையங்கள்’ நாவல் கூட்டுறவுச் சங்கத்தின் விருதைப் பெற்றது. மலேசிய நவீன இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பை போற்றும் வகையில் 2019ம் ஆண்டு இவருக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்பட்டது.

இவரது ‘அக்கினி வளையங்கள்’ நாவல் மலேசிய கம்யூனிஸ்ட்டுகளின் சிக்கலான வாழ்வினூடாக பயணிக்கும் ஒரு நிலக்கிழாரின் வாழ்வை பேசும் நாவல். உள்ளடக்கத்திலும் கலை நுட்பத்திலும் இதுவே இவரது முக்கியப் பங்களிப்பாகக் குறிப்பிடப்படுகிறது.

இவரது மனைவி அமரர் சமாரியா. இவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!