கோலாலம்பூர்: மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தில் பெய்த இடைவிடாத கன மழையை தொடர்ந்து ஆறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அம்மாநிலத்தின் கங்கார், அராவ், பாடாங் பெசார் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால் அம்மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் வெள்ள நீர் வீடுகளில் புகுந்தது. பாதிக்கப்பட்ட பலர் வெள்ள நிவாரண மையங்களுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்.
பாயான் லெப்பாஸில் உள்ள பாலர் பள்ளி திடீரென வெள்ளத்தில் மூழ்கியது. அப்பள்ளியில் இருந்த 40 ஆசிரியர்கள், 4 மாணவர்களை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
இதற்கிடையே, மலேசியாவில் வெள்ளம் ஏற்படக்கூடிய 5,000 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தீயணைப்பு, மீட்புப்படையின் இயக்குநர் அஹ்மத் இஸ்ராம் ஒஸ்மான் கூறியுள்ளார்.
பருவ நிலை மாற்றம் காரணமாக நாட்டில் ஆங்காங்கே அதீத மழை பெய்யும் என்பதால் கடுமையான வெள்ளம் ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதனால் வெள்ளத்தை எதிர்கொள்ள தீயணைப்பு மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டு இறுதியில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதில் ஊராட்சித்துறை மேம்பாட்டு அமைச்சு எப்போதும் தயார்நிலையில் உள்ளது. அதன் தொடர்பான தயார்நிலை பணிகளை மேற்கொள்ள நாடு முழுவதிலுமுள்ள ஊராட்சித்துறை அமலாக்கத் தரப்பினர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஙா கோர் மிங் கூறியுள்ளார்.

