மணிலா: தென்சீனக் கடலில் ஸ்கார்பரோ கடற்பகுதி உட்பட மற்ற சர்சைக்குரிய கடற்பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்குமாறு பிலிப்பீன்ஸ் மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல்படை ஊக்கம் அளித்துள்ளது.
அந்தக் கடற்பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி பல கப்பல்களை அனுப்பிவைத்துள்ளது.
சீனாவின் கப்பல்கள் அங்கு இருப்பதால் அவ்விடங்களைத் தவிர்த்துவிட வேண்டாம் என்று தனது நாட்டு மீனவர்களிடம் பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல்படை வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கடற்பகுதிகள் பிலிப்பீன்ஸின் தனது உரிமைக்குட்பட்ட பொருளியல் மண்டலத்தின் ஒரு பகுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்தப் பகுதிகளில் தனது கப்பல்களை எப்போதும் நிறுத்திவைக்க பிலிப்பீன்ஸால் முடியவில்லை.
இருப்பினும், அப்பகுதியில் மீன்பிடிக்கும் தனது மீனவர்களின் உரிமைகளைக் கட்டிக்காக்க கடப்பாடு கொண்டிருப்பதாக அந்நாட்டின் கடலோரக் காவல்படை உறுதி அளித்தது.
ஸ்கார்பரோ கடற்பகுதியில் பிற நாடுகளின் படகுகளோ கப்பல்களோ நுழையாமல் இருக்க 300 மீட்டர் நீளமுள்ள மிதலவைத் தடுப்பை அங்கு பொருத்தியது, இதைக் கடந்த திங்கட்கிழமையன்று பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல்படை வெட்டியெறிந்தது.
அந்தக் கடல்பகுதி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சீனாவின் பிடியில் உள்ளது. அங்கு தனது கடலோரக் காவல்படைக் கப்பல்களையும் பெருமளவிலான மீன்பிடிப் படகுகளையும் சீனா நிறுத்திவைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று பிலிப்பீன்ஸிடம் சீனாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் தாங்கள் பிரச்சினை ஏற்படுத்தவில்லை என்று பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் கில்பர்ட் டியோடோரோ கூறினார்.
தமது நாட்டைச் சேர்ந்த மீன்வர்கள் அந்தக் கடற்பகுதிக்குப் போக முடியாதபடி சீனாதான் தடுப்பு போட்டு பிரச்சினையை தொடங்கிவைத்ததாக அவர் தெரிவித்தார்.