கவ்ஷியுங்: தைவான், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பலை வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கு எதிராகத் தனது தற்காப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தைவான் இறங்கியுள்ளது. அதன் ஓர் அங்கமாக இந்தப் புதிய நீர்மூழ்கிக் கப்பல் அமைந்துள்ளது.
தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதையொட்டி சீனா, தைவானுக்கு ராணுவ ரீதியாவும் அரசியல் ரீதியாகவும் நெருக்குதலை அளித்து வந்துள்ளது.
அரசதந்திர ரீதியாக சீனா, தைவானைத் தனிமைப்படுத்தியுள்ளது. அதோடு, தைவானைச் சுற்றி பல சீன ஆகாயப் படை விமானங்கள் முற்றுகையிட்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் தைவான் தற்காப்புக்கான செலவை அதிகரித்துள்ளது. அது தற்காப்புக்காக 2024ஆம் ஆண்டுக்கு 19 பில்லியன் டாலரை (26 பில்லியன் வெள்ளி) ஒதுக்கியிருக்கிறது.
ராணுவக் கருவிகளையும் பொருள்களையும் பெற அந்தத் தொகை பயன்படுத்தப்படும். குறிப்பாக தைவானின் முக்கியப் பங்காளி நாடான அமெரிக்காடமிருந்து வரும் ராணுவ ரீதியான உதவிக்கு இது பொருந்தும்.
எனினும், நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதில் தைவான் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளது.
இதைக் கையாளும் நோக்கில் எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க 2016ஆம் ஆண்டில் நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் ஒன்றை தைவானிய அதிபர் சாய் இங் வென் தொடங்கினார். அதன்கீழ் ‘ஹாய் குன்’ என்ற பெயரைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்டது. ‘ஹாய் குன்’ என்றால் சீன மொழியில் கற்பனை நீர் விலங்கு என்று பொருள்.
தொடர்புடைய செய்திகள்
தைவானின் தெற்குக் கடற்கரை நகரான கவ்ஷியுங்கில் சடங்கு ஒன்றில் ‘ஹாய் குன்’ வெளியிடப்பட்டது.
“இந்நாள் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடி்ககும்,” என்று திருவாட்டி சாய் மகிழ்ச்சி தெரிவித்தார்.
“முன்பெல்லாம் உள்ளூரில் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இயலாது என்று கூறப்பட்டது. இன்றோ அனைவரும் பார்க்க ஒரு நீர்மூழ்கிக் கப்பலை நாமே வடிவமைத்தது மட்டுமின்றி தயாரித்தும் இருக்கிறோம். நாம் சாதித்துவிட்டோம்,” என்றார் திருவாட்டி சாய்.

