பெய்ஜிங்: சீனா, தைவான் நீரிணைக்கு அருகே உள்ள தனது தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் ஃபூஜியான் மாநிலத்தின் கடற்கரைப் பகுதிவழி அதிவேக ரயில் சேவையைத் தொடங்கியுள்ளளது உஎன்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது, தைவான் நீரிணைக்கு அருகே சீனா தொடங்கியிருக்கும் முதல் அதிவேக ரயில் சேவை.
புதிய அதிவேக ரயில் சேவை, ஃபூஜியான் மாநிலத் தலைநகர் ஃபூசுவோவிலிருந்து வியாழக்கிழமையன்று காலை புறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 277 கிலோமீட்டர் நீளம்கொண்ட ஃபூசுவோ-சாங்ஜோ ரயில் சேவை திறக்கப்பட்டதாக சின்ஹுவா ஊடகம் குறிப்பிட்டது.
இதுவே சீனாவின் முதல் கடல்வழி அதிவேக ரயில் பாதை. மூன்று கடற்கரைப் பகுதிகளின்வழிச் செல்லும் அதிவேக ரயில்கள் மணிக்கு 350 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் ரயில்வே அமைப்பான சைனா ஸ்டேட் ரயில்வே குழுமம் இத்தகவல்களைத் தெரிவித்ததென்று அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் கூறின. ஃபூசுவோ, சியாமென் ஆகியவற்றுக்கு இடையே புதிய அதிவேக ரயிலில் ஒரு மணிநேரத்துக்குள் பயணம் செய்யலாம்.

