தாஷ்கெண்ட்: உஸ்பெகிஸ்தான் தலைநகர் டாஷ்கெண்ட்டில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே ஒரு சரக்குக் கிடங்கில் பின்னிரவு நேரத்தில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அவசரநிலை அமைச்சின் பேச்சாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
“வெடிப்புக்குப் பிறகு தீ மூண்டு, இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது,” என்று அவர் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தீயிலும் சுற்றுவட்டார வீடுகளிலும் காயம் அடைந்தோருக்கு அவசர மருத்துவக் கவனிப்பு அளிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு டெலிகிராம் வாயிலாகத் தெரிவித்தது.
இதுவரை “யாருக்கும் கடுமையான காயங்கள் இல்லை” என்றும், சரக்குக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புக்கு மின்னல் காரணம் என்றும் அமைச்சு தெரிவித்தது.
ஆனால், பத்து பேருக்கு சிகிச்சை அளித்ததாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் டாஷ்கெண்ட் மருத்துவமனை அதிகாரி ஒருவர் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சரக்குக் கிடங்கில் மூண்ட தீயால் விமான நிலையம் பாதிப்படையவில்லை என்றும், வழக்கம்போல் செயல்படுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
சரக்குக் கிடங்கில் தீப்பற்றி எரிவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. வெடிப்பினால் சுற்றுவட்டார வீடுகளின் சன்னல்கள் தெறித்ததாகவும், வீட்டின் உட்புறங்கள் சேதமடைந்ததாகவும் ஏஎப்பி செய்தியாளர் தெரிவித்தார்.
சரக்குக் கிடங்குக்கு அருகில் வசிக்கும் 72 வயது திரு கொட்டிபவ் முஸ்தஃபோ, நடு இரவில் நிலநடுக்கம் போன்ற அதிர்வால் தூக்கம் கலைந்து எழுந்ததாகக் கூறினார். அவரது மகனுக்குக் காலில் காயம்பட்டதோடு, வீடும் சேதமடைந்தது.

