பனாமாவின் டேரியன் பாதையைக் கடக்கும் குடியேறிகளின் எண்ணிக்கை சாதனை அளவில் உயர்வு

2 mins read
31997297-a981-4b8a-b55a-ed9207e1d1d3
டேரியன் பாதையைக் கடந்து செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை 400,000ஐத் தாண்டியுள்ளது. - படம்: ஏஎஃப்பி

பனாமா சிட்டி: பனாமாவையும் கொலம்பியாவையும் இணைக்கும் கரடுமுரடான, ஆபத்தான டேரியன் பாதையைக் கடந்து செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை 400,000ஐத் தாண்டியுள்ளது என்று அதிகாரத்துவ தரவு கூறுகிறது.

இந்தப் பாதை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்கா தீவிரப்படுத்தியிருந்தாலும் டேரியன் பாதையைக் கடப்போரின் அளவு குறைந்தபாடில்லை.

அந்தப் பாதையைக் கடப்போரில் பாதிக்கு மேற்பட்டவர்கள் சிறுவர்கள், குழந்தைகள் என்று பனாமா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. செப்டம்பரில் மட்டும் முன்னைய மாதத்தின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஐந்தில் ஒரு மடங்கு அதிகரிப்பைக் காண முடிந்தது.

ஆகக் கடைசியாக 402,300 குடியேறிகள் டேரியன் பாதையைக் கடந்து சென்றுள்ளார்கள். இது 2022 முழுமைக்குமான எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம்.

இந்த ஆண்டு முழுமைக்கும் டேரியன் பாதையைக் கடந்து செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை 400,000 ஆக இருக்கும் என்று ஐக்கிய நாட்டு சபை கடந்த ஏப்ரலில் முன்னுரைத்திருந்தது.

காட்டு வழியாகச் செல்லும் இந்த ஆபத்தான பாதையைக் கடந்து செல்வோரில் பெரும்பாலானோர் வெனிசுவேலா நாட்டினர். மேலும் எக்குவடோர், ஹைட்டி உட்பட இதர நாடுகளின் மக்களும் கடக்கின்றனர் என்று பனமா பாதுகாப்பு அமைச்சு கூறியது.

மற்ற நாடுகளுக்கு மக்கள் இடம்பெயர்வதன் அதிகரிப்பை நிறுத்தும் நடவடிக்கைகளை பனாமா செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.

குற்றப் பதிவுகள் உள்ள மக்களில் அதிகமானோரை நாடு கடத்துதல், அந்நாட்டில் சுற்றுப்பயணிகள் தங்கியிருக்கும் நாள்களைக் குறைத்தல் போன்றவை அந்நடவடிக்கைகளில் அடங்கும்.

ஆவணமற்ற குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த கடந்த ஏப்ரலில் அமெரிக்கா, பனாமா, கொலம்பியா ஆகிய நாடுகள் மேற்கொண்ட இரண்டு மாதத் திட்டத்துக்குப் பிறகு மேற்கண்ட நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன.

மக்கள் எல்லையைக் கடக்கும் விகிதத்தைக் குறைக்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளால் அந்த விகிதம் 70 விழுக்காடு குறைந்திருந்தாலும், அமெரிக்க எல்லையை ஒட்டிய மெக்சிகோவில் வந்து சேரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, முன்னைய நடவடிக்கைகள் மெல்ல மெல்ல வலுவிழந்து வருவதைக் காட்டுகிறது.

இதைத் தவிர, அமெரிக்காவை நோக்கிச் செல்லும் சில ஆப்பிரிக்க, கியூபா மக்கள் மற்றும் அடைக்கலம் நாடுவோர் நிக்காராகுவாவுக்கு விமானம் வழி சென்று அங்கிருந்து டேரியன் பாதை வழியாக அமெரிக்காவுக்கு நுழைய முயல்கிறார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்