புக்கெட்: தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத் தலமான புக்கெட்டில் இரண்டாவது விமான நிலையத்தைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அங்கு புக்கெட் அனைத்துலக விமான நிலையம் மட்டும் செயல்பட்டு வருகிறது.
அதோடு, தாய்லாந்தின் ஃபாங் கா மாநிலத்திலும் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பேங்காக் போஸ்ட் நாளிதழ் இத்தகவலைத் தெரிவித்தது.
அந்தமான் கடற்கரைப் பகுதிகளில் இருக்கும் மாநிலங்களுக்கு சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கென உள்கட்டமைப்புத் திட்டங்கள் வரையப்பட்டன. அவற்றைச் செயல்படுத்தும் முயற்சிகளை தாய்லாந்து அரசாங்கம் எடுத்து வருவதாக பேங்காக் போஸ்ட் குறிப்பிட்டது. புக்கெட், கிராபி, ஃபாங் கா உள்ளிட்ட பகுதிகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அவற்றில் அடங்கும்.
வெள்ளிக்கிழமையன்று புக்கெட்டுக்கான உள்கட்டமைப்புத் திட்டங்களை தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நேரில் சென்றுப் பார்வையிட்டபோது பேங்காக் போஸ்ட் இந்த விவரங்களை வெளியிட்டது.
புக்கெட்டின் புதிய விமான நிலையம் 5.8 பில்லியன் பாட் (215 மில்லியன் வெள்ளி) செலவில் கட்டப்படவுள்ளது. ஃபாங் காவின் டாக்குவா துங் வட்டாரத்தில் கட்டப்படவுள்ள புதிய அனைத்துலக வுமான நிலையத்துக்கான செலவு 80 பில்லியன் பாட் என்று பேங்காக் போஸ்ட் தெரிவித்தது.
அதேவேளையில் கிராபி விமான நிலையமும் மேம்படுத்தப்படவுள்ளது. அதற்கு 2.7 பில்லியன் பாட் செலவாகும்.
3.98 கிலோமீட்டர் நீளம்கொண்ட காத்து-பாத்தோங் விரைவுச்சாலை, 30.26 கிலோமீட்டர் நீளம்கொண்ட முவாங் மாய்-கோ கியாவ்-காத்து விரைவுச்சாலை ஆகியவற்றை அமைப்பதும் தாய்லாந்தின் புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் அடங்கும்.
புக்கெட்டில் நில, ஆகாய வசதிகளை மேம்படுத்த மொத்தம் 148 பில்லியன் பாட் மதிப்புள்ள ஏழு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தமது அமைச்சு பரிந்துரைக்கத் தயாராகி வருவதாக தாய்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் சூரியா ஜுங்ருங்கிரியான்கிட் முன்னதாகக் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்