மோசடி வழக்கில் முன்னிலையாகும் டிரம்ப்

மோசடி வழக்கில் முன்னிலையாகும் டிரம்ப்

1 mins read
97aed642-f68c-4824-85a2-ce33972470ba
சொத்து மதிப்பை உயர்த்தியதாக தம் மீது தொடரப்பட்ட வழக்கு போலியானது என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வாதிட்டார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: தம் மீதான வழக்கு விசாரணைக்காக நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலையாக இருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

“என்னுடைய நற்பெயருக்கு ஏற்பட்டு இருக்கும் சோதனையை எதிர்த்துப் போராட நான் நீதிமன்றம் செல்கிறேன்,” என்று அவர் தமது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார்.

சொத்துகளின் மதிப்பை மோசடியாக உயர்த்தியதாக அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு போலியானது என்று டிரம்ப் விமர்சித்து உள்ளார்.

மேலும், அந்த வழக்கைத் தொடர்ந்ததற்காக நியூயார்க் மாநிலத் தலைமைச் சட்ட அதிகாரி லெட்டிசியா ஜேம்ஸ் மற்றும் அந்த வழக்கின் நீதிபதியையும் தமது பதிவில் அவர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

டிரம்ப்பும் அவரது குடும்ப வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் தொழிலின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் சொத்துகளின் மதிப்பை மோசடியான முறையில் உயர்த்தியது கண்டறியப்பட்டதாக நியூயார்க் மாநில நீதிபதி ஆர்தர் எங்கோரோன் கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.

ஆனால், மோசடியில் ஈடுபடவில்லை என்று டிரம்ப்பும் வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் வாதிட்டனர்.

2022 செப்டம்பரில் இருந்தே டிரம்ப் மீது தலைமைச் சட்ட அதிகாரி ஜேம்ஸ் வழக்குத் தொடுத்து வருகிறார்.

டிரம்ப், அவரது இரு மகன்கள், டிரம்ப் நிறுவனம் மற்றும் சிலர், சொத்துகளை மதிப்பிட்ட விதத்தில் மோசடியை அரங்கேற்றியதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

குறிப்புச் சொற்கள்